அவமானத்தை வென்று சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட்!

இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு தருணங்களில் ஒன்றாக 2007 டி-20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்கள் கருதப்படுகிறது.

இந்தச் சாதனைக்காக யுவராஜ் சிங்கை எல்லோரும் கொண்டாடினர். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஹீரோவாக தலைநிமிர்ந்து நின்றார் யுவராஜ் சிங்.
அதே நேரத்தில் சிக்சர்களை வாரி வழங்கிய அந்த ஓவரை வீசியதற்காக எல்லோராலும் விமர்சிக்கப்பட்டார் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.

பந்துவீசவே லாயக்கில்லை என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க, பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தார் பிராட்.
அதே நேரத்தில் இதற்காக அவர் துவண்டு விடவில்லை. மாறாக தன் பந்துவீச்சு ஸ்டைலை மாற்றி கடுமையாக பயிற்சி பெற்றார்.

குறைந்த ஓவர் போட்டிகள் தனக்கு ஏற்றதாக இல்லையோ என்று கருதியவர், டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ஸ்டூவர்ட் பிராடுக்கு பதிலாக வேறு ஏதாவது பந்துவீச்சாளர் அந்த ஓவரை வீசி இருந்தால், இந்நேரம் கிரிக்கெட் உலகில் இருந்தே காணாமல் போயிருப்பார்.
ஆனால் கடும் போராளியான ஸ்டூவர்ட் பிராட், இந்த நெருக்கடியையும், அவமானத்தையும் கடந்து தன்னை நிரூபிக்க போராடினார். அந்த போராட்டம் இன்று உலகின் மிகசிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவரை மாற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட். இந்தச் சாதனையை எட்டிய உலகின் 7-வது பந்து வீச்சாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
140 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனையைப் படைத்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட்.

இவருக்கு முன்னதாக முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, ஷேன் வார்ன், கிளென் மெக்கிராத், வால்ஷ், ஆண்டர்சன் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *