தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனாவால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு?

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது ெதாடர்பாக நாளை நடைபெறும் மாவட்ட கலெக்டர்களுடனான கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால், இந்த கட்டுப்பாட்டை முறையாக  கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  6 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக தினமும் அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதத்துக்கு பிறகு கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு-தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பு, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுதல் என்று பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தியும் அதை பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி புது, புது கட்டுப்பாடுகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அப்போது அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக  அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுக்கலாம் என்று முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்தை தாண்டி பாதிப்பு இருந்து வருகிறது. மதுரை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர்கள் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் பஸ், ரயில்  சேவை இருக்காது. அதே நேரத்தில் மாவட்டங்களுக்குள் பஸ் இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்.

காரணம், பஸ் இயக்க வாய்ப்பு இருப்பதால், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடைகள் நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கடைகள் நேரத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் இப்போது அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் மாதத்திலும் நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

அதே போன்று ஆகஸ்ட் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்பு குறைவு தான்.  இது தொடர்பாக நாளை நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி அறிவிக்க வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *