கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப், விஷாலின் நேரடி அனுபவங்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் 77 வயதான இந்தி நடிகர் அமிதாப்.

மருத்துவமனையில் இருந்தபடியே அவர் வலைத்தளத்தில் இட்ட பதிவு:

“கொரோனா நோயாளி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்ட பிறகு மற்றொரு மனிதரைத் தொடர்ந்து பல வாரங்களுக்குப் பார்க்க முடியாது என்பது யதார்த்தம்.
நர்ஸ்களும், டாக்டர்களும் வருவார்கள். மருத்துவச்சேவையில் ஈடுபடுவார்கள். அவர்கள் எப்போதும் சுயப் பாதுகாப்பு உடைகளையும், கருவிகளையும் அணிந்திருப்பார்கள்.

அவர்கள் யார்? அவர்களுடைய அம்சங்கள் என்ன? என்பதை எல்லாம் ஒருபோதும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.
எந்த மருத்துவரின் வழிகாட்டுதலில் நீங்கள் கவனிக்கப் படுகிறீர்களோ, யார் உங்களைப் பற்றிய மருத்துவ அறிக்கையை நிர்வகிக்கிறார்களோ, அவர்கள் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்வதற்கு ஒருபோதும் உங்களுக்கு அருகில் வருவதே இல்லை.

இந்த நோய் குறித்த திட்டவட்டமான அம்சங்களை இந்த உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இதற்கு முன்னால் மருத்துவ உலகம் இவ்வளவு தூரம் ஊனமுற்றதாய் இருந்ததில்லை. சோதனையும், பிழையும் இப்போதுபோல் எப்போதும் இருந்தது இல்லை” என்று பதிவிட்டிருக்கிறார் அமிதாப் பச்சன்.

நடிகர் விஷால் கொரோனா பாதிப்பு குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.
“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியது எனது கட்டாயம்.
எனது தந்தைக்கு முதலில் கொரோனாத் தொற்று ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு நான் அழைத்துச் செல்லவில்லை. மருத்துவமனைக்கு எதிராக நான் இருப்பதாக நினைக்க வேண்டாம்.
வீட்டில் வைத்து தந்தையைக் கவனித்துக் கொண்டேன். இதனால் எனக்கும் அதே அறிகுறிகள் ஏற்பட்டன. காய்ச்சல், சளி, இருமல் இருந்தது.

எனது மனேஜர் ஹரிக்கும் தொற்று ஏற்பட்டது. நாங்கள் ஆயுர்வேதச் சிகிச்சை எடுத்துக் கொண்டோம். நான்கு நாட்களில் காய்ச்சலும், மற்ற அறிகுறிகளும் குறைந்தன. ஏழு நாட்களில் முழுமையாக குணமடைந்தோம்.

ஆயுர்வேத மருந்தை விற்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. எங்களை எது காப்பாற்றியது என்பதைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இதைப் பகிர்கிறேன்.

நான் எல்லோருக்கும் சொல்வது கொரோனா தொற்று ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் பயப்படாதீர்கள். பயம்தான் நிறையப் பேரை இக்கட்டான சூழலுக்குக் கொண்டு போயிருக்கிறது.

கொரோனாவை எதிரத்துப் போராடுவேன் என்கிற மன தைரியத்தில் ஆயுர்வேத மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும்.
எனக்கும், அப்பாவுக்கும் மன தைரியம் இருந்ததால், ஆபத்தில் இருந்து மீண்டு சாதாரண வாழ்க்கைக்கு வந்து விட்டோம்” என்று பதவிட்டிருக்கிறார் விஷால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *