போதைப் பொருள் பாவனையும் கொரோனாவைப் போன்று கொடூரமானது!

போதைப்பொருள் பாவனை என்பது உலகளாவிய ரீதியில் சமூகத்திற்கு கூடுதலான கேடுகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைப் பொருள் கடத்தலானது உலகில் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததாகும்.

உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் மாபியாக்கள் அதிக செல்வாக்கு மிகுந்தவர்களாக இக்கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தலுக்கும் பாவனைக்கும் எதிராக உலக நாடுகள் மிகக் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ள போதிலும், கடத்தல்காரர்கள் மாற்று வழிகளைக் கையாண்டபடி அவ்வர்த்தகத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டபடியே வருகின்றார்கள்.
போதைவஸ்து கடத்தலில் இருந்து இலங்கையும் விதிவிலக்கானது அல்ல. சட்டங்கள் கடுமையாக இருந்த போதிலும் இலங்கையில் கடந்த காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவை எடுத்து நோக்குவோமானால் இந்த உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம்.

கடந்த கால அரசுகளின் அலட்சியங்களும் இதற்கான காரணம் எனலாம். போதைப்பொருள் குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் காவலில் இருந்தவாறே சிறைக்கு வெளியே குற்றச் செயல்களை வழிநடத்தி இரக்கிறார்களென்றால் கடந்த கால அலட்சியங்களே இதற்குக் காரணம் எனலாம்.

தனிமனிதனை மாத்திரமன்றி, குடும்பம் மற்றும் சமூகம், நாடு என்ற ரீதியில் சகல மட்டங்களிலும் போதைப்பொருள் பாவனை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் சீர்குலைந்து போனோர் ஏராளம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சமீபத்தில் மீண்டும் அதிகரித்தமைக்கும் போதைப்பொருள் பாவனையாளர்களே காரணமாக அமைந்து விட்டனர். போதைப்பொருளுக்கு அடிமையானோரை தடுத்து வைத்து புனர்வாழ்வு அளிப்பதற்காக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள கந்தக்காடு என்ற இடத்தில் இயங்கி வருகின்ற நிலையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டில் தலைதூக்கியது. ஆனாலும் நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

நாட்டின் பல்வேறு இடங்களையும் சேர்ந்த போதைப்பொருள் பாவனையாளர்கள் தங்க வைக்கப்படுகின்ற புணர்வாழ்வு நிலையம் அதுவாகும். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேவேளை அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்களில் பலர் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தோருடன் நெருக்கமாகப் பழகிய காரணத்தினால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றதன் காரணமாக நோய்த்தொற்று மேலும் பலருக்கு பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனாலும் அரசாங்கம் துரித கதியில் செயற்பட்டு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. அச்சுறுத்தல் நிலைமை நீங்கியுள்ளது.
ஒரு நாட்டில் போதைவஸ்து பாவனையானது நேரடியாக மாத்திரமன்றி, மறைமுகமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு கொரோனா பரவல் மீண்டும் உருவெடுத்தமை நல்லதொரு உதாரணமாகும்.

ஆகவே கொரோனா தொற்று பரவுவதை நாட்டில் கட்டுப்படுத்துவது ஒருபுறமிருக்க, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையையும் முற்றாக ஒழிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களை நாட்டில் முற்றாக ஒழிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போதைவஸ்து எமது நாட்டுக்குள் கடத்தப்படுவது முற்றாகக் கட்டுப்படுத்தப்படுமானால் பெருமளவு குற்றங்கள் நீங்கி விடுமென்பது உறுதி.
அதேசமயம் கொரோனாவை நாட்டில் முற்றாக கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அண்மையில் உறுதி அளித்திருப்பதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.

நாட்டில் கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் முதன்முறையாக தீவிரமடையத் தொடங்கிய கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அனுபவம் எமது நாட்டுக்குள்ளது.
முன்னைய நல்லாட்சி அரசாங்கம் இப்போதும் ஆட்சியில் இருந்திருக்குமானால் இலங்கையில் கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்காவை ஒத்ததாக இருந்திருக்கும் என்று மக்கள் வெளிப்படையாக கூறிக் கொள்வதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டி உள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது. சுகாதாரத் துறையினர், பொலிஸார், பாதுகாப்பு படையினர் உட்பட அனைத்து துறையினரும் இவ்விடயத்தில் வழங்கி வரும் ஒத்துழைப்பு அபாரமானதாகும்.

கொரோனாவை வெற்றி கொள்ளும் போராட்டத்தில் நாட்டில் அண்மையில் ஏற்பட்டது ஒரு தற்காலிக பின்னடைவு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. எனவே ஆதாரமற்ற வதந்திகளை நம்பி மக்கள் பதற்றமோ அச்சமோ அடைய வேண்டியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *