கோடிக்கணக்கான வருமானத்தை இழந்தார் திருப்பதி ஏழுமலையான்!

உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். கடந்த நிதியாண்டில் வங்கியில் திருப்பதி தேவஸ்தானத்தால் செலுத்தப்பட்டுள்ள முதலீட்டுக்கான  வட்டி மூலமாக ஆண்டுக்கு ரூ700 கோடியும், பிரசாதங்கள் விற்பனை மூலமாக ரூ400 கோடியும்,  தரிசன டிக்கெட் மூலமாக ரூ245 கோடியும்,  அறைகள் வாடகை மூலமாக ரூ110 கோடியும், தலைமுடி ஏலத்தின் மூலமாக ரூ106 கோடியும் வருவாய் கிடைத்தது.

இதை கணக்கில் வைத்து, நடப்பு நிதியாண்டிலும் ரூ1,350 கோடி வரை வருவாய் கிடைக்கும் என தேவஸ்தானம் எதிர்பார்த்தது. இதை மனதில் வைத்தே, ரூ3,309 கோடிக்கு பட்ஜெட் போட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் ஜூன் வரையில் 80 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட தொகைக்கான வட்டியாக ரூ60 கோடியும், தேவஸ்தான ஊழியர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மட்டும் தரிசித்து செலுத்திய காணிக்கை தொகையாக ரூ50 லட்சமும் மட்டுமே வருமானமாக கிடைத்தது. ஆனால், அந்த 80 நாட்கள் ரூ750 கோடி வருவாய் கிடைத்திருக்க வேண்டும்..

இந்நிலையில், கடந்த ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக நாளொன்றுக்கு 60 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை தரிசித்த நிலையில், 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசித்தனர். இதனால், ஒரு மாத உண்டியல் காணிக்கை சராசரியாக ரூ100 கோடி கிடைக்க வேண்டிய நிலையில், வெறும் ரூ17 கோடி மட்டுமே கிடைத்தது.  இதேபோல், கடந்த நான்கு மாதங்களில் ரூ1,100 கோடி வருவாய் வரவேண்டிய நிலையில் இதுவரை ரூ270 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இதுதவிர, தங்கும் அறை வாடகை, லட்டு விற்பனை, தலைமுடி காணிக்கை ஆகியவற்றின் மூலம் பல கோடி இழப்பும் ஏற்பட்டு உள்ளது.

  • கடந்த 1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பிரமோற்சவத்தின்போது முதல் முறையாக ஒரே நாளில் ரூ1 லட்சமும், 1990ம் ஆண்டு ஒரேநாளில் ரூ1 கோடியும் உண்டியல் கிடைத்தது.
  • தொடர்ந்து, 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மிகவும் அதிகப்பட்சமாக  உண்டியல் வருவாயாக ஒரே நாளில் ரூ5.73 கோடி கிடைத்தது. இதுவே, தற்போது வரை மிகப்பெரிய உண்டியல் வருவாய் சாதனையாக நீடிக்கிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *