உலகளவில் ஆண்டு தோறும் 100 மில்லியன் சுறா மீன்கள் கொல்லப்படுகிறது!

சமீபத்தில் நடந்த ஆய்வின்படி, உலகளவில் சுறா மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என கணிக்கப்படுகிறது.

சுறா மீன்களின் எண்ணிக்கை குறைய மீன் பிடி தொழிலே காரணமாக உள்ளது என சைன்ஸ் ஜர்னல் நேச்சர் சஞ்சிகையில் ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது.
ஆழ்கடலில் கேமரா பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆழ்கடலிலிருந்த 20% சுறா மீன்கள் அழிந்து விட்டன என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

இதுவரை 58 நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டதில் இருந்து, பாதுகாப்பற்ற மற்றும் வாழத் தகுதியற்ற சூழ்நிலையை உருவாக்கும் மீன் பிடி தொழில் நுட்பமே சுறா மீன்கள் அழியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பவளப் பாறைகளில் வாழும் சுறா மீன்கள் முழுமையாக அழிந்துவிட்டது என இந்த ஆய்வு கூறுகிறது.

நாம் உணவுக்காக அதிகம் சார்ந்திருக்கும் கடலின் சுற்றுச்சூழலை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்வதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சுற்றுலாவாசிகள் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி இருக்கும் நாடுகளின் கடல் பகுதியில் தற்போது சுறா மீன்களைக் காண்பது மிகவும் கடினம்.
உலகளவில் ஆண்டு தோறும் 100 மில்லியன் சுறா மீன்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் உள்ள கடல் பவளப் பாறைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தார், கொலம்பியா, இலங்கை, குவாம் மற்றும் டொமினிக்கா உள்ளிட்ட நாடுகளில் தான் சுறாமீன்கள் அதிகம் அழிந்துள்ளன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 58 நாடுகளில், 34 நாடுகளில் பவளப் பாறைகளில் வாழும் சுறா மீன்களுடன் சேர்ந்து பவளப் பாறைகளும் அழிந்துள்ளன என கூறப்படுகிறது.
உலகின் மிக பெரிய பவளப் பாறை வளங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் சுறா மீன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

பவள பாறைகளில் வாழும் சுறா மீன்களின் எண்ணிக்கை பஹாமாஸ் பகுதியிலும் ஆஸ்திரேலியாவிலும் மிக அதிகமாகக் காணப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான மீன் பிடி முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுறா மீன்களின் எண்ணிக்கை குறையவில்லை. சிறந்த முறையில் பவளப் பாறைகள் பராமரிக்கப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *