விபத்தின்போது கை கால்கள் துண்டாக்கப்பட்டால் என்ன செய்வது?

“இறைவனின் அற்புதமான மனித படைப்பும் அவை பாதிக்கப்பட்டால் சரி செய்யும் வைத்திய ஊழியர்களும்! (வைத்திய நிபுணர்,வைத்தியர்,தாதியர்கள்,சுகாதார உதவியாளர்கள், கதிரியக்கவியலாளர்கள்)

இரவு 10 மணியளவில் கடைசி வேலையை முடித்து விட்டு தூங்குவோம் என்று எண்ணிய ஒரு ஓடாவி கிரைன்டரை கொண்டு வேலை செய்யும் போது, தனது கிரைன்டர் சில்லு உடைந்து கையின் மூன்று விரல்களை துண்டாக்கிய சம்பவம்.

அழுகிறார் அழுகிறார் வேதனையுடன் அழுகிறார்.

உடனே கவலை வேண்டாம் உங்கள் கையை சரி செய்துதருவோம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைக்கபட்டார்.

Plastic surgeon “Dr. பிரவீன் விஜயசிங்க” அவர்கள்தான் கைக்கு பொறுப்பான வைத்திய நிபுணர். அன்பாக பழகும் இயல்பு கொண்ட ஒரு மாமனிதர் என்றால் மிகையாகாது. அர்ப்பணிபுடன் செயல்படும் ஒரு வைத்திய நிபுணர் என்றும் சொல்லலாம்.

சுமார் 3 மணித்தியால சத்திர சிகிச்சையில், கை அசைவுக்கு பயன்படும் சகல நரம்புகளும் துண்டிக்க பட்டு தொங்கிய நிலையில் இருந்த கை வெற்றிகரமாக இணைக்கபட்டது.”

இது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அண்மையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பற்றி வைத்தியசாலை ஊழியரால் பதிவிடப்பட்ட ஒரு பதிவு.
(சில திருத்தங்களுடன்)

இதேபோல் இந்த வருட ஆரம்பத்தில் ஒருவருடைய முற்றாக துண்டிக்கப்பட்ட கையும் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக மீள்பொருத்தப்பட்டதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

நான் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலை செய்த காலப்பகுதியில் ஒருவரின் துண்டாக்கப்பட்ட விரலை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் தொடர்ச்சியாக 14 மணித்தியாலங்கள் போராடி மீண்டும் பொருத்தினார்.

இவ்வாறான விடயங்கள் நாள்தோறும் நடந்தாலும் அதை பாராட்டுவதற்கும் நன்றி சொல்வதற்கும் எமக்கு மனது வருவதில்லைதானே.

சரி இப்பொழுது கை, கால் அல்லது விரல்கள் விபத்தின் பொழுது துண்டாக்கப்பட்டால் அதை எவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு வரவேண்டும் என்று பார்ப்போம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக வைத்தியசாலையை நாடவேண்டும்.

அதேபோல் துண்டாக்கப்பட்ட பகுதியை நீர் செல்லாதவாறு பொலித்தீன் பையினால் சுற்றி ஐஸ் கட்டிகள் நிறைந்த பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்தியசாலைக்கு எடுத்து வரும் பொழுது வைத்தியர்களால் அதை மீண்டும் பொருத்திவிட முடியும்.

இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் உங்களாலும் ஒருவரின் அவயங்களை காப்பாற்ற முடியும்.

Dr. விஷ்ணு சிவபாதம்
குழந்தை நல வைத்திய நிபுணர்.
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *