தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று எம்எல்ஏக்களுக்கு கொரோனா !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக 4 ஆயிரத்தை தாண்டி வந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று 5 ஆயிரத்தை நெருங்கியது. மேலும் ஒரே நாளில் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் எம்எல்ஏக்களில் முதன்முதலாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி)கொரோனாவால் உயிரிழந்தார். அதே சமயம் எம்எல்ஏக்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாவது அதிகரித்தது. அந்த வகையில் திமுக எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான் (செஞ்சி), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி.அரசு (செய்யூர்), கடலூர் மாவட்ட செயலாளர் கணேசன் (திட்டக்குடி) ஆகியோரும், அதிமுக எம்எல்ஏக்கள் பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜுனன் (கோவை தெற்கு) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலோபர் கபீல் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். இந்த வரிசையில் மேலும் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 16 எம்.எல்.ஏக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வேலூர்: வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ப.கார்த்திகேயனுக்கு (56 ) நேற்று கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு லேசான தலைவலியும், அசதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிஎம்சி மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நேற்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் ராணிப்பேட்டை எம்எல்ஏவும், திமுக மாவட்ட செய லாளருமான  ஆர்.காந்தி(73) கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடலில் லேசான அசதி ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கும் நேற்று தொற்று உறுதியானது. இதையடுத்து அவரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான செங்குட்டுவன்(63), கொரோனா ஊரடங்கு காலம் முதல் நிவாரண பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இருமல், காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மாலை ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று காலை வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செங்குட்டுவன் எம்எல்ஏ, கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய முடிவு செய்துள்ளனர். ஒரேநாளில் 4,979 பேர் பாதிப்பு: இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரு நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
    தமிழகத்தில் நேற்று மட்டும் 52,993 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4,979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 4,902 பேர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 77 பேர். ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 2,937, பெண்கள் 2,042. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70, 693 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • 16 எம்எல்ஏக்கள் இதுவரை பாதிப்பு
    வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ப.கார்த்திகேயன், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.காந்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான செங்குட்டுவன் ஆகியோருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 16 எம்எல்ஏக்கள் கொரோனாபாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
  • 52 ஆயிரம் பரிசோதனை
    தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரு நாளில் 52 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. புதிதாக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சோதனை மையம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 23  பேரும், அரசு மருத்துவமனையில் 55 பேரும் உயிரிழந்துள்ளனர்.
  • கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்
    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நேற்று 4,059 பேர் குணமடைந்தனர். தமிழகம் முழுவதும் நேற்று வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 50,284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • கொரோனாவால் மாண்டவர்கள்
    கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் மட்டும் 27 பேர் இறந்தனர். மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டில் 8 பேர், மதுரை 8, திருவள்ளூர் 5, சேலம் 4, திண்டுக்கல் 3, கன்னியாகுமரி 3, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தேனி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா  ஒருவர் என்று மொத்தம் 78 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 3 பேர் இணை நோய்கள் இல்லாமல் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *