கொரோனா தொற்றால் 10 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்!

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் 10 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அண்டார்டிகா தவிர்த்து பூமியில் உள்ள ஆறு கண்டங்களிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை இல்லாத வகையில் சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணத சரிவை சந்தித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் பணக்கார நாடுகளை காட்டிலும் ஏழை நாடுகள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன.
அந்நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலை மற்றும் மோசமான சுகாதார கட்டமைப்பு உள்ளிட்டவை மீளா துயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. கொரோனாவால் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ஏராளமான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகளுக்கு, ஐநா சபை மட்டுமின்றி பல தொண்டு அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரும் மறைந்த நெல்சன் மண்டேலாவின் 102 வது பிறந்தநாள் விழாவில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியா குட்டெரெஸ், கண்ணுக்குத்தெரியாத ஒரு வைரஸ் தொற்றிடம் நாம் மண்டியிட்டுள்ளோம். இந்த தொற்றுநோய் நம் உலகின் பலவீனத்தை நிரூபித்துள்ளது என தெரிவித்தார். வறுமையை ஒழிப்பதில் முன்னேற்றம் அடைந்துவந்தாலும் சமத்துவமின்மையைக் குறைப்பதில் அனைத்து நாடுகளும் பல மாதங்களுக்குப் பின்னரே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என தெரிவித்தார்.

14 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகளையும் உலகளவில் 600,000 மக்களையும் கொன்ற இந்த தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, முறைசாரா தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த அவர், “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரும் சர்வதேச மந்தநிலையை நாம் எதிர்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார். மேலும் இந்த வைரஸால் இன்னும் 10 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் என்பது ஒரு “எக்ஸ்ரே” ஆகும், இது உலக நாடுகள் கட்டிய சமூகங்களின் பலவீனமான எலும்புக்கூட்டில் எலும்பு முறிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மேலும் சமத்துவம் இல்லாத சுகாதார பகிர்வு, பராமரிப்பு பணிகளை கண்டுகொள்ளாமல் விட்டது, வருவாய் ஏற்றத்தாழ்வு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவையும் இந்த எக்ஸ்ரே மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *