இந்தியாவில் மிக வேகமாக அதிகரிக்கும் கொரோனா!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 582 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் தொடக்கம் முதல் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து, தொடர்ந்து 5வது நாளாக, 6வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்து வந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில் நேற்று மீண்டும் ஒரு புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முதல் முறையாக 29,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 582 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகினர்.

வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில், 110 நாட்களுக்கு பிறகுதான் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அடுத்த 49 நாட்களில் இந்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது. அதற்கு அடுத்த 5 நாட்களில் 8 லட்சமாக உயர்ந்த இந்த எண்ணிக்கை, நேற்று முன்தின நிலவரப்படி மூன்றே 3 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 9 லட்சத்தை தாண்டியது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளதால், இதே நிலை நீடித்தால், அடுத்த இரு தினங்களில் உறுதியாக 10 லட்சத்தைக் கடக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கு நிகராக குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இறப்பு, குணமடைந்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 29,429 பேர் பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், மொத்த பலி எண்ணிக்கை, நேற்று உயிரிழந்த 582 பேருடன் சேர்த்து 24,309 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது, 3 லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், குணமடைந்தோர் சதவீதம் 63.24 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 213 பேர், கர்நாடகாவில் 85, தமிழ்நாட்டில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, ஆந்திராவில் 43, டெல்லியில் 35, உத்தர பிரதேசத்தில் 28, மேற்கு வங்கத்தில் 24 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • தினமும் 3.20 லட்சம் பரிசோதனை
    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அறிவியல் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லோகேஷ் சர்மா கூறுகையில், “கடந்த 14ம் தேதி வரை, ஒரு கோடியே 24 லட்சத்து 12 ஆயிரத்து 664 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவில், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதிலும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 161 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதுவே, ஒரே நாளில் அதிகளவிலான மாதிரிகள் எடுக்கப்பட்டதாகும்,’’ என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *