APP இல் புதுப் படங்கள் பார்க்கலாம்!

புதுப்பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது கோலிவுட். புதுப்படங்களை பார்க்க இனி தியேட்டருக்கே செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனில், பார்க்கிங்கில், கேண்டீனில் என வீணான செலவுகள் இல்லை. தரமான பொழுதுபோக்குச் சித்திரங்களை இனி வீட்டிலிருந்தே பார்க்கமுடியும்.
ஆமாம். தியேட்டர் நம் வீடு தேடி வரப் போகிறது. ‘அட்டகத்தி‘, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ உட்பட பல படங்களைத் தயாரித்தவரும், ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படங்களின் இயக்குநருமான சி.வி.குமாரின் முயற்சி இது. ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் தியேட்டர் டு ஹோம் எனும் புதிய தொழில்நுட்பத்தை – appஐ – இங்கே கொண்டு வந்திருக்கிறார்.

‘‘இப்படி ஆரம்பிக்கப் போறது தெரிஞ்சதும் பலரும் பாராட்டினாங்க. தங்களோட படங்களைத் தர்றேன்னு சொல்லியிருக்காங்க. மும்பைல 1930கள்ல ரீகல் சினிமானு ஒரு தியேட்டர் கட்டியிருந்தாங்க. இந்தியாவின் பழமையான திரையரங்குல அதுவும் ஒண்ணு. அப்படி ஒரு பெருமையான தியேட்டர் ஞாபகமா ரீகல் டாக்கீஸ்னு பெயர் வச்சிருக்கேன்…’’  திருப்தியாகப் பேசுகிறார் சி.வி.குமார்.
இது ஒரு பெரிய டாஸ்க் ஆச்சே..?

நிச்சயமா. இதை மக்கள்கிட்ட கண்டிப்பா கொண்டுபோய் சேர்ப்போம்னு நம்பிக்கை இருக்கு. கடந்த சில வருஷங்களாவே, இப்படி ஒரு பிளாட்
ஃபார்ம் ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனா, அதை செயல்படுத்த ஆகும் செலவு பயமுறுத்துச்சு.அதாவது அதன் செயலி (app) ஆரம்பிக்கற செலவுகளை விட, டேட்டா, இடவசதிக்கான செலவுகள்தான் பெரியளவில் மலைக்க வைச்சது.

தவிர, மக்கள்கிட்டயும் இப்படியெல்லாம் படம் பார்க்க ஆர்வம் இருக்குமானு புரியாம, தெரியாம குழம்பினேன். ஆனாலும் துணிச்சலோடு கடந்த பிப்ரவரி மாசம் இதுக்கான வேலைகளை ஆரம்பிச்சோம். எதிர்பாராம லாக் டவுன் வந்திடுச்சு. இந்த டைம்ல இதுக்கான தேவைகள் இருக்கறதால, ‘ரீகல்  டாக்கீஸை’ கொண்டு வந்துட்டோம். இப்ப சின்ன படங்களுக்கான பிளாட்ஃபார்ம் குறைஞ்சுக்கிட்டே போகுது. பெரிய படங்களை வெளியிட ஓடிடிகள் நிறைய இருக்கு. தியேட்டர்களும் இருக்கு.

ஆனா, சின்ன பட்ஜெட் படங்களுக்கான ரிலீஸ் சான்ஸ் குறைவு. இதுபோக கன்டன்ட் படங்களுக்கு எங்கயுமே சரியான இடம் இல்ல… வருமானமும் வர்றதில்ல. ஒரு படம் பார்க்க எவ்வளவு கட்டணம்..? எப்படி பார்க்க முடியும்?எங்க ‘ரீகல் டாக்கீஸை’ நீங்க மொபைல் ஆப், டெஸ்க்டாப், ஆப்பிள் டிவி, ஆண்ட்ராய்டு டிவி, ஓடிடினு சகலத்திலும் டவுன்லோடு செய்து படம் பார்க்க முடியும்.

இது சப்ஸ்கிரிப்ஷன் – மாத/ ஆண்டு / சந்தா – டைப் கிடையாது. தியேட்டர் மாதிரிதான். பணம் கட்டி ஒரு படத்தை பார்க்கலாம். 25 ரூபாய்ல இருந்து நூறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கற ஐடியா இருக்கு. சில படங்களுக்கு சலுகைகளும் கொடுக்கப் போறோம்.

ரிலீஸ் ஆகப்போற படத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்பே ப்ரீ புக் பண்ணினா, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். தரமான சினிமா மட்டுமில்ல, மாற்று சினிமா, இண்டிபெண்டன்ட் சினிமானு எல்லா வகைகளையும் வெரைட்டியா கொடுக்கப்போறோம்.

நாங்களும் பணம் கொடுத்துதான் படம் வாங்கிப் போடுறோம். ஸோ, போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கறவரை, அந்த படம் எங்க பிளாட்
ஃபார்ம்ல இருக்கும்.

அதேசமயம் தொடர்ந்தும் படங்கள் வந்துகிட்டே இருக்கும். ஒரு கன்டன்ட்டை ஒரு சில வாரங்களுக்குப் பிறகு அதே தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்திடுவோம். அவங்க, வேற எந்த ஓடிடி தளங்களுக்கும் வித்துக்கலாம். அதே டைம்ல நாங்க சொந்தமா தயாரிக்கும் கன்டன்ட்கள் எங்க தளத்திலேயே இருக்கும். எப்ப வேணா பார்க்கலாம்.

இயக்குநர் சேரன் இதுக்கு முன்னாடி ‘சினிமா டு ஹோம்’னு திட்டம் கொண்டு வந்தார்… இப்ப இயக்குநர் ராம்கோபால் வர்மா கூட தன்னோட படங்களை ரிலீஸ் பண்ண ஸ்பெஷல் திட்டம் கொண்டு வந்துட்டார்… நீங்க அறிமுகப்படுத்தப் போவது எந்த ரகம்..?

புது ரகம்! சேரன் சார் கொண்டு வந்த திட்டம் பிசிக்கல் மெத்தட்னு நினைக்கறேன். சிடில கன்வர்ட் செய்து, வீட்டுக்கு டெலிவரி கொடுக்கறது மாதிரி. அவரோட ஸ்கீம் பத்தி ஐடியா இல்ல. அந்த டைம்ல அது நல்லா போயிருக்க வேண்டியது. எந்த இடத்துல மிஸ் ஆச்சுனு எனக்குத் தெரியல.

அதைப்போல ராம்கோபால் வர்மா, app கொண்டு வரலைனு நினைக்கறேன். இப்போதைக்கு நெட்ல மட்டும் கொண்டு வந்திருக்கார்.
எங்களோடது கூகுள் மூவீஸ், ஆப்பிள் மூவீஸ் மாதிரியான டைப். வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம்.

இயக்குநர் சி.வி.குமார் எப்படி இருக்கார்..?
நல்லா இருக்கார். இப்ப ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். இன்னொரு ஸ்கிரிப்ட்டை நண்பர் ஒருத்தர் இயக்கறார். இது தவிர, ரீகல் டாக்கீஸுக்காகவே நாலு படங்கள் தயாரிப்புல இருக்கு. எதுக்கும் டைட்டில் வைக்கல. ஒரு படத்துல அஸ்வின் நடிக்கறார். இன்னொரு புராஜெக்ட்ல ஷிவதாநாயரும், ரம்யா பாண்டியனும் நடிக்கறாங்க. மத்த படங்கள்ல புதுமுகங்கள் இருக்காங்க.

சக்சஸ்ஃபுல் தயாரிப்பாளரான நீங்களே இப்படி appல ரிலீஸ் பண்ண ஆரம்பிக்கிறீங்க… சினிமாவின் எதிர்காலம் இனி இப்படித்தான்
இருக்குமா?வருங்காலம் என்பதைத்தாண்டி இப்பவே ஆடியன்ஸ் எல்லாரும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படங்களுக்கு மட்டும்தான் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கற நிலைமை இருக்கு. நீங்க தியேட்டர்ல படம் பார்க்கறதா இருந்தா ஓர் ஆளுக்கு டிக்கெட் ரேட்டே இருநூறு ரூபா ஆகிடும். நாலு பேர் படம் பார்த்தா, பார்க்கிங், பாப்கார்ன் செலவுகள்னு ஆயிரத்தை தொடும்.

ஒவ்வொரு வாரமும் நாலு படமாவது ரிலீஸ் ஆகுது. ஒரு ஃபேமிலியால வாரத்துக்கு நாலாயிரம் செலவழிக்க முடியுமா? கண்டிப்பா முடியாது. வருஷத்துக்கு 250 படம் ரிலீஸ் ஆகுதுனாலும், 100 படங்கள் வரை நல்ல படமாகவே இருந்தாலும் யாரும் இவ்ளோ பெரிய தொகை செலவழிச்சு படம் பார்க்க மாட்டாங்க.

‘பாகுபலி’ மாதிரி படங்கள் தியேட்டர் கன்டன்ட். ஆனா, ஐம்பது லட்சத்துல இருந்து ஒன்றரைக் கோடி வரை செலவு பண்ணி படம் எடுத்துட்டு, பப்ளிசிட்டிக்காக மேலும் சில லட்சம் செலவு பண்ணிட்டு தியேட்டர்ல கூட ரிலீஸ் பண்ண முடியாம இருக்கும் படங்களின் கதி? இவங்களுக்கான நல்ல ப்ளாட்ஃபார்மா எங்களோடது இருக்கும். சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சி இது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *