வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை !

இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர்.அத்துடன், வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்ததாவது:-“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய அரசால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவே, அதனை மதிக்கவேண்டும், நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது கட்டாயமில்லை.

தேர்தல் காலத்தில் மாத்திரமே 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படுகின்றது. தேர்தல் முடிந்த பிறகு 13 என்று ஒன்று இருக்கின்றதா என்றுகூட தெரியாது.

வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையே அவசியமாகின்றது. வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும், விவசாயத்தை முன்னெடுப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இவை நடைபெற்றால் அதிகாரப் பகிர்வுக்கான அவசியம் எழாது.

அரசியல்வாதிகளே 13 பற்றி கருத்து வெளியிடுகின்றனர். மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவும், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவுமே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர்.

எனவே, அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எமது அமைப்பு முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *