2200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகநாதர் சுவாமி சமாதி மடத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கலை மற்றும் தொல்பொருள் வரலாற்று ஆய்வாளா் காந்திராஜன் தலைமையில், ஆய்வாளா்கள் ராஜவேல், ஆனந்தன் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது 2200 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்களைக் கொண்ட கல்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தூணில் ஏகன், ஆதன் கோட்டம் என எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் வட்டெழுத்துக்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இறையிலியாக “ஏகநாதா் பள்ளிபடை மண்டலி ஈந்தாா்” என எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மடத்தில் வெள்ளி மற்றும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட நாதஸ்வரம் போன்ற இசை வாத்தியம், பாண்டியா் கால நாணயங்கள், எழுத்தாணி, மான் கொம்பினாலான எழுத்தாணி தொரட்டி, மண்பானை, விலங்குகளை அறுக்கப் பயன்படும் கூா்மையான கல், உடைந்த ஓடுகள், பள்ளிப்படை சமாதியடைந்தவா்களின் தலைமீது வைக்கப்படும் சிறிய அளவிலான சிவலிங்கம் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *