வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு மற்றுமொரு சட்டமும் இருக்கமுடியாது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலும், அதிகாரப்பகிர்வு குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு மற்றுமொரு சட்டமும் இருக்கமுடியாது. நாட்டில் ஒரு சட்டமே இருக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ரணசிங்க பிரமேதாசவே புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என கருணா அம்மான் அறிவித்துள்ளார். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே எமது இராணுவம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்று தந்தை செய்வதுபோலவே இன்று மகன் சஜித் பிரேமதாசவும் செயற்படுகின்றார்.

வடக்குக்குசென்று அரசியலமைப்புக்கு அப்பால்சென்று அதிகாரங்களைப் பகிர்வதற்கு தயார் என சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்வது சம்பந்தமாகவே அவரது கருத்து அமைந்தது. 
கடந்த காலங்களில் வடக்கு முதல்வராக இருந்த விக்னேஷ்வரன் எப்படி செயற்பட்டார்? பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? கடவுள் துணை என்று மட்டுமே என்னால் கூறமுடியும்.

சஜித் நேற்று உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டார். அதாவது வடக்கில் இருந்து தெற்கை உதைக்கும் வகையிலேயே 13 குறித்த அவரின் அறிவிப்பு அமைந்தது.  வடக்கும், கிழக்கும் எமது தாய்பூமி. எனவே, இரு சட்டங்கள் அமுலாவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஒரு ஆட்சி, ஒரே சட்டம் என்பதே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *