மோசடி செய்து சொகுசாக வாழ்ந்த தம்பதி திடீரென மனைவியால் கணவன் படுகொலை !

இந்தியாவில் ரூ 500 கோடி அளவில் மோசடி செய்த கணவன் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன் மற்றும் சுகன்யா தம்பதி. இந்த தம்பதிகள் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்எல்எம் மூலம் பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து சொகுசாக இருந்தனர்.

அதன் பின்னர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சிலமாதங்களில் ஜாமினில் வெளிவந்த ஜான் பிரபாகரன் தலைமறைவாகிவிட்டார். ஜான் பிரபாகரன் மனைவி சுகன்யா 2018-ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார்.

அதன்பின்னர் திருப்பதி அருகில் உள்ள சந்திரகிரி சென்று தன்னுடைய தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதனையடுத்து கணவர் குறித்து தேடி வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள மவுலாலியில் அவர் இருப்பது தெரிய வந்து கடந்த 15 ஆம் திகதி அங்கு சென்ற சுகன்யா ஜான் பிரபாகரனுடன் தங்கினார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜான் பிரபாகரன் மரணமடைந்தார். திடீரென்று கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சுகன்யா அருகில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் ஜான் உடலைக் கைப்பற்றி சோதனை நடத்தியபோது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பியதுடன் சுகன்யாவிடம் விசாரித்தனர்.

விசாரணையில், ஜான் சுகன்யாவையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, ஐதராபாத்தில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததனால் ஜான் சுகன்யா சண்டை போட்டதுடன் தன்னோடு திருப்பதிக்கு வருமாறு ஜானை அழைத்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஜான் தன்னைவிட்டு செல்லுமாறு சுகன்யாவிடம் கூறியுள்ளார்.

மேலும் தான் சிறைக்குள்ளும், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் கஷ்டப்பட்டதாகவும், ஜான் மட்டும் சந்தோஷமாக வாழ்ந்ததை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதை அடுத்து கணவர் தூங்கியபோது அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக சுகன்யா வாக்குமூலம் அளித்துள்ளதை அடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *