நான் தெரிவித்த கருத்து தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம் !

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று 6 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று காலை ஆஜராகியிருந்தார்.

அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று ஆஜராகியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தருமாறு, விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு கடந்த 23 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சுகயீனமுற்ற காரணத்தினால் அன்றைய தினம் வருகை தர முடியாது என அவர் அறிவித்ததாக பொலிஸார் கூறினர்.

விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், இன்றைய விசாரணையில் என்ன நடந்தது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் பின்வருமாறு விளக்கினார்.

நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆகவே, அதுவொரு ஊடகத்தால் வந்த ஒரு சின்ன ஒரு இது. ஆகவே, இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில்தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

இதேவேளை, அவரது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் பின்வருமாறு பதிலளித்தார்,

அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்

இதேவேளை, அவரது கருத்து தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்பட்டதா என வினவிய போது,

இல்லை. அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை. அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்றபோது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை

என பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *