கொரோனாவால் கலங்கிய கொலிவுட் சினிமா!

ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்படும்போதெல்லாம் மற்ற துறைகளைப் போலவே திரைத்துறையையும் நினைத்து பயம் ஏற்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கோலிவுட் முடங்கியிருக்கிறது. சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மெல்ல ஆசுவாசத்தை ஏற்படுத்த, 20க்கும் மேற்பட்ட பட வேலைகள் தவழ ஆரம்பித்துவிட்டன. பக்கத்து மாநிலமான தெலுங்கானா, கேரளாவில் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என க்ரீன் சிக்னல் வந்துவிட்டது. ஆனால், இங்கே படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.

பெப்சிக்கு உட்பட்ட 24 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலி தொழிலாளர்கள். திரையரங்கை நம்பியிருந்த ஐம்பதாயிரம் தொழிலாளர்களின் கதி என்ன? இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியது நினைவிருக்கலாம். அதில் திரைத்துறைக்கென எந்த ஒதுக்கீடும் இல்லாமல் போன அதிர்ச்சியில் இருக்கிறது கோலிவுட்.

ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் 60 படங்களின் நிலை அந்தரத்தில் தொங்குகிறது. இச்சூழலில் ‘லாக்டவுனில் எப்படி இருக்கிறது கோலிவுட்?’ என திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் கேட்டோம். பொங்கி விட்டார்கள். ‘‘இந்தத் தொழில்தான் முழுக்க முழுக்க சலுகைகள் எதிர்பார்க்காம நடக்கிற தொழில். அதனாலயே எந்த சலுகைகளும் கிடைக்காதுனு தெரிஞ்சே படம் தயாரிக்கறோம். இப்படி ஆல்ரெடி வருத்தமா இருக்கறதால புதுசா வருத்தப்பட எதுவுமில்ல…’’ என்றபடி பேச ஆரம்பித்தார் ட்ரீம் வாரியர்ஸின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு.

‘‘சின்னத்திரை மாதிரி இங்க உடனடியா படப்பிடிப்புகளை தொடங்க முடியாது. குறிப்பிட்ட ஆட்களை வச்சு மட்டும் ஷூட் பண்ணினா போதும்னா, பட வேலைகளை உடனே ஆரம்பிச்சிடலாம். அப்படியில்லாம மொத்த டீமையும் வச்சு ஷூட் நடத்தணும். அவுட்டோர் போனா எல்லாரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திட்டுதான் படப்பிடிப்பை நடத்த முடியும்.
நடிகர்கள் வெளியூர், வெளி மாநிலங்கள்ல இருந்து வரணும். அப்ப தனிமைப்படுத்தல் அவசியம். ஆக, டிவி சீரியல் மாதிரி 60 பேரை மட்டும் வைச்சு சினிமா ஷூட் நடத்த முடியாது. ஒரு ஃபைட் சீக்குவென்ஸுக்கு ஃபைட்டர்களே 20 பேர் வரை தேவை. அப்புறம் அவங்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை ஹேண்டில் பண்றவங்க.

இப்படி எல்லாரையும் கணக்குல சேர்த்தா குறைஞ்சது 300 பேர் இல்லாம சினிமா படப்பிடிப்பு சாத்தியமில்லை. அதெல்லாம் போக தங்கும் இடங்கள், ரெஸ்டாரண்ட்ஸ் எல்லாம் இன்னும் சரியா திறக்கலை. இதையெல்லாம் தயாரிப்பாளர்களான நாங்க கவனத்துல கொள்ளணும்.
ஒருவேளை 75 பேரை வைச்சு ஷூட் நடத்த முடியும்னு ஆரம்பிச்சாலும் படப்பிடிப்புல கலந்துக்கற ஒருத்தருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் போச்சு. எல்லாருக்கும் பரவிடும். அதுபோக தொற்று ஏற்பட்ட ஒருத்தருக்கான மெடிக்கல் எக்ஸ்பென்ஸே குறைஞ்சது ரூ.3 லட்சமாகும்.

இந்தத் தொகையை அரசாங்கம் அளிக்குமா… இல்ல இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்குமா… இல்ல, தயாரிப்பாளர் தலைல விழுமா..? இப்படி பதில் தெரியாத கேள்விகள் பல இருக்கு… என்ன செய்யறதுனு தெரியலை…’’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.இதை ஆமோதித்தபடி தொடர்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். ‘‘திரைப்படத் துறைனா அது வளமான துறைனு மத்திய அரசு நினைக்குது. ஆனா, உண்மை அப்படியில்ல. அதனால மத்த தொழில்கள் மாதிரியே எங்களையும் கருதணும்னு வேண்டுகோள் வைக்கறோம். 

சினிமா ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொழில். மத்த தொழில்கள் மாதிரி இதுக்கும் வங்கிக் கடன் கிடைக்கணும். அப்பதான் கொரோனாவுக்கு அப்புறம் சினிமா தலைதூக்கும் உண்மைல பல லட்சம் தொழிலாளர்கள், பல கோடி வருமானம் வரும் துறை இது. ஆனா, அத்தனை கோடிகளை முதலீடா கொட்டும் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் எப்பவுமே சொல்லிக்கறா மாதிரி இருந்ததில்ல. இந்த லாக்டவுன்ல இன்னும் மோசமாகிடுச்சு.
மத்த தொழில்கள் மாதிரி இதுக்கும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செய்யணும். ஒரு கமிட்டியை நியமிச்சு இந்தத் துறையையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்.

ஏன்னா, நான் ஒருத்தருக்கு நூறு ரூபா சம்பளம் கொடுத்தா, இன்னொருத்தர் அதேநபருக்கு இருநூறு ரூபா சம்பளம் கொடுக்கற சூழலும் நிலவுது.
நடிகர்கள் தங்களோட சம்பளத்துல 30% குறைச்சுக்கணும்னு நான்தான் முதல்ல குரல் கொடுத்தேன். ஒரு கூட்டுத்தொழிலா இதைக் கொண்டு வந்தாதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.

முன்னாடியெல்லாம் ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே, ஹீரோக்கள் தங்களுக்கு சாட்டிலைட் ரைட்ஸும், சிட்டி ரைட்ஸும் வேணும்னு சம்பளத்துல ஒரு பகுதியா கேட்டு வாங்கிப்பாங்க. இதை ஆரோக்கியமாதான் கருதறேன். இப்படி அவங்க செய்யறப்ப படத்து மேல பொறுப்பும் பங்கும் வரும்.

இப்ப அப்படியில்ல. யாரோ பணம் போடறாங்க… நாம போறோம், வர்றோம்…. நடிக்கக் கூட வேணாம்னு அலட்சியமா இருக்காங்க.
ஃபைனான்ஸ் வாங்கின யாருமே இன்னும் வட்டி கொடுக்கல. ‘யாருமே வட்டி கொடுக்க வேணாம்’னு சொல்லலை. மூணு மாசமோ நாலு மாசமோ சேர்த்து கொடுங்கனுதான் சொல்றாங்க. ஃபைனான்ஸியர்களையும் குறை சொல்ல முடியாது. அவங்களும் வட்டிக்கு வாங்கித்தான் கொடுக்கறாங்க. நடைமுறை சிக்கல்கள் எல்லாம் சீராகணும்…’’ என்கிறார் சதீஷ்குமார்.

‘‘இப்ப தயாரிப்பாளர்கள் சங்கத்துல சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் பத்திதான் பேசிட்டு இருந்தோம். அவங்க வாங்கின கடனுக்கான வட்டி தொடர்பாதான் டிஸ்கஸ் செஞ்சோம்…’’ என்றபடி பேசத் தொடங்கினார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.‘‘எந்த ஃபைனான்ஸியரும் இப்ப வட்டி கேட்கல. லாக் டவுன் முடிஞ்சதும் கேட்பாங்க. அப்ப அவங்ககிட்ட சலுகைகள் அளிக்கச் சொல்லி கேட்கப் போறோம்.

எந்த அரசாங்கம் வந்தாலும் சினிமாத்துறையை கடைசியாதான் கவனிக்கறாங்க. அவங்களைப் பொறுத்தவரை இதை வெறும் பொழுதுபோக்காதான் கருதறாங்க. அத்தியாவசிய தொழிலா பார்க்கலை. இந்த நிலை மாறினாதான் சினிமா தொழில் சரியாகும்.ஷூட்டிங் தொடங்க நிறைய நிபந்தனைகள் விதிச்சிருக்காங்க. ஸ்பாட்டுல ஒரு மெடிக்கல் ஆபீசர் இருக்கணும். இங்க பரவாயில்ல. மும்பைல ஆம்புலன்ஸ் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. நடிகர் நடிகைகள் எல்லாருமே ஷூட்டிங் வர பயப்படறாங்க. சிலர், ‘நாம இப்ப உடனேவா ரிலீஸ் பண்ணப் போறோம்? கொரோனா வீரியம் குறையட்டும்’னு சொல்றாங்க.

தியேட்டரும் எப்ப திறப்பாங்கனு தெரியலை. ரெஸ்டாரண்ட் ஓபன்ல இருந்தாலும் பயம் காரணமா மக்கள் ஹோட்டல் பக்கம் வரலை. இதே பயம் தியேட்டர் மேலயும் மக்களுக்கு இருக்கு. வெளிய போய் வேலை பார்த்தாதான் குடும்பத்தை காப்பாத்த முடியும்னு இருக்கறவங்களும் சுயதொழில் பண்றவங்களும் கொரோனாவுக்கு பயப்படாம வேலைக்குப் போறாங்க. மத்த யாரும் வெளில வர்றதில்ல. வேலைக்குப் போறவங்களும் ஆபீஸ் முடிஞ்சதும் வீட்டுக்குதான் நேரா போறாங்க. அநாவசியமா யாரும் செலவு பண்றதில்ல.

இந்த நிலைல தியேட்டர் எப்ப திறப்பாங்கனு தெரியலை. ஜூலைலயாவது நிலைமை சீராகணும்…’’ என்று பெருமூச்சு விடுகிறார் தனஞ்செயன்.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியோ, இன்னும் வலுவாக குரல் கொடுக்கிறார். ‘‘நல்லா இயங்கிட்டு இருக்கற தொழில் முடங்கினாலே அதை நிமிர்த்தறது கஷ்டம். அப்படியிருக்க ஏற்கனவே தடுமாறிட்டு இருக்கற திரைத்துறை நிமிரணும்னா அரசுதான் மனசு வைக்கணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *