பொய் பிரச்சாரமாக இருந்தால் இரண்டு வருட சிறைத்தண்டனை!

மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருக்கும் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு பொய் பிரசாரமாக இருந்தால் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் சட்டத்தின் பிரகாரம் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த தெரிவித்தார்.

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருக்கும் கூற்று, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவரின் இந்த சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

விளையாட்டுக்களில் பிழை, மோசடிகளை தடுக்கும் வகையில் கடந்த 2019 அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் கீழ், தற்போது தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஏனெனில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு குறித்த சட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற விடயமொன்றாகும்.

என்றாலும், சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் இதில் பிரதானமாக இடம்பெறவேண்டி இருப்பது இந்த கூற்றின் உண்மைத்தன்மை தொடர்பாக தேடிப்பார்ப்பதாகும்.

ஒருவேளை, மஹிந்தானந்த அளுத்கமகேயின் கூற்று பொய் குற்றச்சாட்டாக இருந்தால், இந்த சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும்.

அதாவது, அவர் பொய் கூற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார் என்ற குற்றத்துக்காக அவருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணையில் குற்றம் ஒப்புவிக்கப்படும் பட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாவரை தண்டப்பணம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகுவார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *