கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது இத்தாலியில்?

கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட இடம் சீனாவின் வூகான் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக இத்தாலியில் கண்டறியப்பட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் சீனாவில் டிசம்பருக்கு முன்னதாகவே கொரோனா பரவிவிட்டது என்றும், அந்த தகவலை சீனா மறைத்துவிட்டதாகவும் சில ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றனர். சீனாவுக்கு வெளியே முதல் நாடாக இத்தாலிதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தற்போது தெரிவந்துள்ளது.

அந்நாட்டில், பிப். 15ம் தேதி முதல் முறையாக 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் உறுதி செய்யப்பட்ட சிறிது நாட்களிலேயே இத்தாலி ஊரடங்கை அறிவித்தது. ஆனாலும், கொரோனா அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது. இத்தாலியில் எவ்வாறு கொரோனா அதிவேகமாக பரவியது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அதில், இத்தாலியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் பரவி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டில் முதன் முதலில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட மிலன் மற்றும் துரின் ஆகிய நகரங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட கழிவு நீரை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அதில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நவம்பர் மாதம் அந்நகரங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீரை பரிசோதனை செய்ததில் அதில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் வைரஸ் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் உலக அளவிலான கொரோனாவின் தீவிரத்தன்மை, வைரஸ் பரவும் வேகம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது.

முதல் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது இத்தாலி மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இத்தாலியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 275 பேருக்கு வைரஸ்  தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இதுவரை  34 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *