தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன்.

இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பொத்துவில்  ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
வடக்கு கிழக்கில் இம்முறை த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர்களை விற்றவர். வடக்கு கிழக்கை அவருக்கு தெரியாது. இன்று போராளிகளை கொச்சைப்படுத்துகிறார். யாழ். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அன்று அக்கட்சியில் இருந்தவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள். இன்று அத்தனை பேரும் கள்வர்கள். தமிழர்களை விற்று பணம் சம்பாதித்தவர்கள். என்று சுமந்திரன் அதற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு முகவர். அவருக்குள்ள வர்த்தகம் பூராக முஸ்லிம்களுடன். கஞ்சிகுடிச்சாற்றில் வெட்டும் எமது மரங்களை அவர்களுக்கு விற்பது,மலையை உடைத்து அவர்களுக்கு விற்று கமிசன் உழைக்கிறார். ஒப்பந்தமே அவரது வேலை. மக்களுக்கு செய்தது ஒன்றுமில்லை.
முதன் முதலில் கப்பலோட்டியவன் தமிழன். எமது சின்னம் கப்பல். அன்று வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டியவன் தமிழன். நாம் இன்று அம்பாறையில் கப்பலோட்டுவோம். இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். மகிழ்ச்சி.

மஹிந்த தேசியப்பட்டியலூடாக எம்.பி. தருவதாகக் கூறினார். நான் மறுத்தேன். தேர்தல் மூலமாக எம்பியாகி எமது அம்பாறை தமிழ்மக்களுக்கு சிறந்த சேவையாற்ற பல திட்டங்களை வகுத்துள்ளேன்.
அன்று என்னை மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கு பியசேனவையும் மஹிந்த அவர்கள் நியமித்தார்கள். நான் மட்டக்களப்பில் பல கோடிருபா பெறுமதியான வேலைகளை செய்தேன். பாசிக்குடா அபிவிருத்தி கல்லடிப்பாலம் பிரண்டிக்ஸ் நிறுவனம் இப்படிப் பல .இன்று பிரண்டிக்ஸில்  7,000 தமிழ் யுவதிகள் வேலை செய்கிறார்கள். அதேபோல் இங்கும் செய்வேன். மாற்றத்திற்காக ஒன்று படுங்கள். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *