கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது!

உலகம் இப்போது உணவுத் தட்டுப்பாடு என்ற சிக்கலில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து ஏற்படவுள்ள இந்த உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முதல் நடவடிக்கையாக வறிய மக்களிடையே சிறந்த சமூக பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியமாகும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை போஷாக்கு கிடைக்காமல் போய் விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். உணவுக்கு பயன்படுத்தப்படும் பிரதான உணவுத் தானியங்களின் அறுவடை இன்னும் தொடர்கிறது. ஏற்றுமதித் தடைகள் மற்றும் உணவுகளை தமக்காக மட்டும் சேமித்து வைக்கும் செயற்பாடுகள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே இதுவரை எல்லாம் சுமுகமாகத்தான் உள்ளன.

அதிக உணவுகள் உள்ள நாடுகளின் உணவு விநியோக சங்கிலியில் இனித்தான் மாற்றங்கள் வரும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் 50 மில்லியன் பேர் வரை தீவிர வறுமைக்கோட்டுக்குள் வரும் சாத்தியம் உள்ளது. ஆனால் நீண்ட கால பாதிப்பு இதை விட மோசமாக இருக்கும். சிறுவயதில் ஏற்படும் மோசமான போஷாக்கு நிலை வாழ்க்கை முழுவதையும் பாதிக்கும்.
உலகில் உள்ள குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் 5 வயதாகும் முன்னரே அந்த வயதுக்கு ஏற்ற வளர்ச்சி குன்றிய நிலையிலேயே காணப்படுவர். வறுமை நீடித்தால் இது போல மில்லியன் கணக்கிலான சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அன்டோனியா குட்டெரஸ் மேலும் கூறுகிறார்.
இந்நிலையில் நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க குட்டெரஸ் மூன்று அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களை இனம் கண்டு அங்கு நிலைமை மேலும் மோசமாவதைத் தவிர்க்க உடினடியாக நடவடிக்கை எடுத்தல், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் இளம் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மாருக்கு உரிய போஷாக்கு சத்தினை பெறுவதற்கு உதவுவதல் ஆகியவையே மேற்படி மூன்று அம்சத் திட்டமாகும்.
அதேநேரம் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எதிர்கால முதலீடுகளை அதிகரிக்கும் செயற்பாட்டை உலக நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கிரமமான உணவு விநியோகத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பெரும்பாலான மக்கள் தமது உணவுப் பொருட்களை அவர்களது உள்ளூர் சந்தைகளில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலை காரணமாக மக்கள் தமது உணவைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று கடந்த வாரம் வெளியான மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிலிருந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வருமான இழப்பு காரணமாக வறிய மக்கள் தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கலாம். உலகளாவிய ரீதியில் தற்போது உணவுப் பற்றாக்குறை இல்லாத போதிலும் ஒருசில நாடுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலை காரணமாக அறுவடை தாமதமாகின்றது. பகுதிநேரத் தொழிலாளர்களுககு வேலை கிடைப்பதில்லை. அதேநேரம் உணவு வீணாக்கப்படுவது தொடர்பான பிரச்சினைகளால் விவசாயிகள் தமது காய்கறி மற்றும் இறைச்சி ஆகியவற்றை கழிவுகளாக கொட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது என்ற அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

முடக்கல் நிலைக்கு முன்னரே உலகளாவிய உணவு விநியோக முறைமையில் பிரச்சினைகள் இருந்தன. மோதல்கள், இயற்கை இடர்கள், காலநிலை சிக்கல், வெட்டுக்கிளி மற்றும் கிருமிகளின் தாக்கம் ஆகியவையே இப்பிரச்சினைகள் ஆகும். கிழக்கு ஆபிரிக்காவில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேநேரம் அங்கு பெய்யும் தொடர் மழையானது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் முடக்கல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மந்த நிலையினால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினிச்சாவை எதிரநோக்கும் அபாய நிலை இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளில் ஏற்கனவே இந்த நிலையைக் காண முடிகிறது. பிரேசிலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் பொருளாதாரங்களை சீர்குலைத்துள்ளதுடன் உணவு விநியோக சங்கிலிகளை பிரச்சினைக்குள்ளாக்கியிருக்கிறது. இதன் காரணமாக அங்கு உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்று அக்னஸ் கலிபட்டா கூறுகிறார்.

இவர் 2021 உணவு முறைகள் உச்சி மாநாட்டுக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் ஆவார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட செயற்பாடுகளை கொரோனா வைரஸ் மாற்றியுள்ளது. இந்நிலையில் வறுமையைக் குறைத்து உணவு விநியோக சங்கிலி முறையை சீராக்க உலக நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது. உணவு எப்போதுமே மக்களை ஒருங்கிணைத்து வந்துள்ளது. அதனை சீராக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்று அக்னஸ் கலிபட்டா மேலும் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *