இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 2004 பேர் பலி!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பலியான நபர்களின் பட்டியலில் தற்போது வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக 2,004 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் மகாராஷ்டிரா, டெல்லியில் நடந்த குளறுபடிகள் என்பது அம்பலமாகி உள்ளது. மற்ற மாநிலங்களின் உண்மையான பலி விபரம் வெளியாகாததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 5வது நாளாக 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,54,161 ஆக உள்ளது. 1,54,643 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

1,87,552 பேர் குணமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 11,921 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சராசரியாக 350 பேர் பலி என்ற நிலையில் நேற்று மட்டும் 2,004 பேரின் மரணம் மொத்த பலி எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உண்மையான கொரோனா மரணங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும், புள்ளி விபரத்தில் நிறைய குளறுபடிகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. நேற்றிரவு வெளியான புள்ளி விபரங்களின்படி வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக 2004 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் இந்த மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனால் நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் 2.9 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,914 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பலி எண்ணிக்கை 4,128ல் இருந்து 5,537 ஆக திடீரென 1,409 மரணங்கள் உயர்ந்துள்ளது. இதில், மும்பையில் மட்டும் புதிதாக 917 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் டெல்லியில் பலி எண்ணிக்கை 1,837 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 437 மரணங்கள் நடந்தன. பழைய மரணங்கள் 344 என்றும், புதிய மரணங்கள் 93 ஆகவும் உள்ளது.

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் 1,846 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 12ம் தேதி தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32,810 ஆகவும், பலி எண்ணிக்கை 984 ஆகவும் உள்ளதாக டெல்லி அரசு ஓர் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு முரணாக புதுடெல்லி மாநகராட்சி மன்றம், கொரோனா தொற்றால் டெல்லியில் இதுவரை 2,098 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், டெல்லி தெற்கு மாநகராட்சியில் 1,080 பேர், வடக்கில் 976 பேர் கிழக்கில் 42 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், வைரஸ் தொடர்பான நேற்றைய விபரத்தை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,701 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,445 ஆகவும், நேற்று ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், மாநிலத்தில் கொரோனாவால் ஏற்கனவே உயிரிழந்து மாநில இறப்பு தகவல்கள் பட்டியலில் இடம்பெறாத 1,409 இறப்புக்கள் தற்போது புதிதாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறாக மாநகராட்சி நிர்வாகம், மாநில சுகாதார துறையும் கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை வெளியிடுவதில் குளறுபடிகளை அரங்கேற்றி உள்ளன.

தற்போது மகாராஷ்டிரா, டெல்லி மரணங்கள் திடீரென பட்டியலில் உயர்த்தி காட்டப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் இறப்பு எண்ணிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. நாட்டின் ெமாத்த கொரோனா மரணங்களில் குழப்பங்கள் நீடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *