இலங்கையில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்க ஆரம்பித்துள்ளது!

நாட்டில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்க ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிய வருமாறு,

” நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துவார், அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவார், அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக மீண்டும் காட்டாட்சி தலைதூக்கும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
மக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே கடந்த சில நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு, அச்சுறுத்தும் செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளன.

ரத்மலானையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கையில் துப்பாக்கிகள் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் பதில் நடவடிக்கையில் இறங்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.
அதுமட்டுமல்ல கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் நபரொருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார். அது தற்கொலையா, படுகொலையா என பலகோணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. உயிரிழந்த நபர் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவர், அதற்கு எதிராக எழுதியுள்ளார், தகவல்களையும் வழங்கியுள்ளார். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே அது தற்கொலைதான் என காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இதற்கு ஒரு சில ஊடகங்களும் துணைநிற்கின்றன.

சுதந்திர சதுக்கத்துக்கு அவர் வந்த விதம் உட்பட எதுவும் சிசிரீவி கமராக்களில் பதிவாகவில்லை. சம்பவம் நடைபெற்ற தினம் கமராக்கல் இயங்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இது எமக்கு பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

குறிப்பாக நபரொருவர் தற்கொலை செய்துகொள்வதாக இருந்தால் தலையில் சுட்டுக்கொல்வதுதான் வழமை. ஆனால், இவர் வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி சுட்டுக்கொண்டு ,தற்கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இது கொலையா, தற்கொலையா என்பதை ஒரு புறம் வைப்போம். ஆனால், ‘அதிகம் பேசவேண்டாம், கதைத்தால் இதே நிலைதான்’ என்ற எச்சரிக்கையை இதன்மூலம் விடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
அமெரிக்க சம்பவத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டமும் ஒடுக்கப்பட்டது. அரசாங்க பாதுகாப்பு என்பது ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *