இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்போது வௌிப்படைத் தன்மை காணப்பட வேண்டும்!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்போது, வௌிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

நோயாளர்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரமுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு அது போதுமானதல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறான சுகாதார அவசர நிலையின்போது, பொதுமக்களின் சுகதாரத்தையும் பொதுமக்களின் அமைதியையும் பேணுவதற்காக பயணக் கட்டுப்பாட்டு சுதந்திரத்தைத் வரையறுக்கவேண்டிய தேவையை ஏற்றுக்கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது பாரியளவில் பொதுமக்களுக்கு தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள விதம் தொடர்பிலான சட்டபூர்வத் தன்மை குறித்து மக்களின் கவனம் திரும்பியுள்ளதாக இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் இரண்டு விதங்களில் முறையாகப் பிறப்பிக்கப்பட முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவது முதலாவது முறையாகும்.

ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கான சிறந்த அங்கீகரிக்கப்பட்ட முறைமை இதுவென ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.

நோய் தனிமைப்படுத்தல், தடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஒழுங்குவிதிகளைப் பிறப்பிப்பது இரண்டாவது முறையாகும்.

எனினும், அவ்வாறு பிறப்பிக்கப்படும் வரையறைகள் நாட்டின் சட்டவாட்சியை மீறக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டின் அரசியலமைப்பு, இலங்கை கட்டுப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமை விதிகளுக்கமைய, பயணிப்பதற்கான சுதந்திரம் வரையறுக்கப்படுவது சட்டத்திற்கமைய இடம்பெற்றால் மாத்திரமே அது சட்டபூர்வமானதாக அமையும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *