ஜனாதிபதியுடன் இணைந்து செயல்பட தயார் சஜித் அணி அறிவிப்பு!

பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறும் பட்சத்தில், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொதுத்தேர்தலில் எமது அணிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கின்றது. எனினும் மக்கள் எவ்வாறான ஆதரவை, ஆணையை வழங்குவார்கள் என்பது ஆகஸ்ட் 5 ஆம் திகதியே தெரியவரும். 
தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறும்பட்சத்தில், நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணக்கூடிய புத்தாக்க சிந்தனை எமது அணியிலுள்ளவர்களிடம் இருக்கின்றது.

ஜனாதிபதி பதவியை வகித்த மைத்திரிபால சிறிசேனவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஒரே விதத்தில் செயற்படக்கூடியவர்கள் என நான் நம்பவில்லை. எனவே, முன்னர் ஏற்பட்டதுபோல் எதிர்காலத்திலும் பிரச்சினைகள் உருவாகும் என ஊகத்தின் அடிப்படையில் கருத்துகளை வெளியிடமுடியாது.

கோட்டாபய ராஜபக்சவே 2025 ஜனவரிவரை நாட்டில் ஜனாதிபதியாக இருப்பார். எனவே, அடுத்து அமையும் நாடாளுமன்றம் அவருடன் இணைந்து செயற்படவேண்டும். சிறப்பாக செயற்படக்கூடிய, புத்தாக்க சிந்தனையுடைய தரப்புகளுடன் இணைந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதி விரும்புவார் என நம்புகின்றேன்.

கட்சி மற்றும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நாட்டின் எதிர்காலமே அனைவருக்கும் முக்கியம். இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *