பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயம்!

இலங்கையில் சிவில் நிருவாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புக்களிலும் இராணுவ மயமாக்கல் தொடருமாயின் பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயமுள்ளதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் இராஜதந்திர மூலோபாயங்கள் பற்றி எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பூகோளச் சூழலில் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் நல்லிணக்க அரசியல் காணப்படுவதால் இலங்கை விடயங்களில் இந்தியா தலையிடுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதோடு இந்தியாவும் சீனாவும் இந்த விடயங்களை கூர்ந்து அவதானிக்கும் என்றும் குறிப்பிட்டதோடு இலங்கையின் போர்க்குற்றங்கள் மனித உரிமை விடயங்களை கையாளும் அமெரிக்காவும் அடக்கியே வாசிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகாலத்தில் இலங்கையில் படை அதிகாரிகள் நிருவாக மற்றும் இதர அரச கட்டமைப்புக்கள் இணைக்கப்படுகின்றமை, ஜனாதிபதி செயலணிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றமை தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோத்தாபய பதவிக்கு வந்ததன் பின்னர் தொடர்ச்சியாக முப்படை அதிகாரிகளை நிர்வாகத்திலும் பல்வேறு உயர்பதவிகளில அமர்த்தி வருகிறார். பல்வேறு நிர்வாகப் பிரிவுகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விளைவுகள் பற்றிய புரிதல் அவசியமாகின்றது.
இராணுவ மயமாக்கலுக்கான காரணம் இராணுவச் சேவை புரிபவர்கள் பொதுவாக சிவில் நிர்வாகத்தினர் சேவையில் கடமை, கண்ணியம் மற்றும் கட்டுபாடு மூன்றுமே கிடையாதென நம்புபவர்களாக இருக்கின்றார்கள்.

முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தாபயவும் இந்த நிலைப்பாட்டில் இருப்பவராக கொள்ளமுடியும். இதன் காரணமாகவே, கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துதல், சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட அத்துறைகளில் இராணுவத்தினரை உள்ளீர்த்திருக்கலாம். அதேபோன்று சிவில் நிருவாகத்தில் அதிகளவு பணம் புழங்கும் மகாவலி அபிவிருத்தித் துறை போன்றவற்றுக்கும் இராணுவ அதிகாரியை செயலாளராக நியமித்திருக்கலாம்.
ஆனால் ஏனைய சிவில் நிருவாகத்தில் படை அதிகாரிகளை உட்புகுத்துவது பற்றி அதிகளவில் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. நெருங்கிவரும் அபாயம் குறிப்பாக இராணுவம் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தப்படுவதால் குறுகிய காலத்தில் நிர்வாக செயல் முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளை காலவோட்டத்தில் அதுபாதிப்படையச் செய்யும்.
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறு இராணுவத்தின் கைகள் நிருவாகத்தில் ஓங்கினால் தேர்தல் நெருங்கும் போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பாகிஸ்தான், பர்மா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இராணுவத்தின் மறைமுகப் பிரவேசமே ஜனநாயக கலாசாரத்தை கொச்சைப்படுத்தியுள்ளன என்பதற்கு உதாரணமாகின்றன.
ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபய, சிங்கள பௌத்த பேரின வாதத்தை ஊக்குவிக்கிறார் என்ற மனநிலை தமிழ் முஸ்லிம் மக்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில் இராணுவ மயமாக்கலை வெவ்வேறு வடிவத்தில் அவர் தொடர்ந்தால் ஜனநாயகதுக்கு எதிர்மறை நிலையே தோற்றம்பெறும். அதுமட்டுமன்றி ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் என்பதில் ஐயமில்லை.

பூகோளச்சூழல்

இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி கோத்தாபயவுக்கும் இடையே அரசியல் நல்லிணக்கம் நிலவுகிறது. ஆகவே இந்தியா, இலங்கையின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களில் தலையிடாது.

சீனாவின் நிலைப்பாடும் அவ்வாறே இருக்கும். ஆனால், இந்திய – சீன உறவுகள் தற்போது பெரும் அழுத்தத்தில் உள்ளன.
தொடரும் எல்லைப் பிரச்சினை மற்றும் தெற்காசிய நாடுகளில் முக்கியமாக பாகிஸ்தான் நேபாள நாடுகளில் சீனாவின் கை ஓங்குதல் அதற்கான முக்கிய காரணங்களாகின்றன.
இலங்கை, சீனாவின் தெற்காசிய – இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு வளையத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆகவே இலங்கையில் கோத்தாபய எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் இந்தியாவும் சீனாவும் தொடர்ச்சியாக கூர்ந்து கவனித்து வருவார்கள்.

அமெரிக்க -சீன உறவுகள் தொடர்ந்து சரிந்துவரும் நிலையில் வழக்கமாக அமெரிக்கா முன்னெடுக்கும் இலங்கை அரசின் மனித உரிமை மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அடக்கியே வாசிக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இலங்கையில் ஏற்படும் நிகழ்வுகள் அமெரிக்காவின் பார்வையில் வராதென்பதும் எனது அனுமானம்.
இத்தகைய சூழ்நிலையில் கோத்தாபய தலைமையிலான ஆட்சியில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்தத் தேர்தல் பாரபட்சமின்றி நடத்தமுடியதம் என்பதை வெளிப்படுத்தினால் தான் பொதுமக்கள் மனதில் கோத்தாபயவின் இராணுவ மயமாக்கலைப் பற்றிய சந்தேகங்கள் மறையும். அல்லாது விட்டால் அவை பாரதூரமாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *