சேகுவேராவின் 92 ஆவது ஜனன தினம் இன்றாகும்

தன்னிகரில்லாத ஓர் போராளியின் புரட்சி என்பது காலம் கடந்தும் வீரியம் குன்றாத மாபெரும் காவியத்தின் கருவூலமே…

புரட்சியை புதைத்தபோது அதனை முளைக்க வைத்து எரித்தபோது உயிர்க்கவைத்த மாபெரும் புரட்சியாளன், சேகுவேராவின் 92 ஆவது ஜனன தினம் இன்றாகும்.

ஆர்ஜென்டீனாவில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி பிறந்த சேகுவேரா, மாக்சியவாதி, மருத்துவர், இலக்கியவாதி, கரந்தடிப் போராளி, யுத்த வல்லுநர், இராஜதந்திரி எனும் பல்வேறு பரிணாமங்களை தன்னகத்தே கொண்ட புரட்சியாளர்.

மண்டியிட்டு வாழ்ந்த இலத்தீன் அமெரிக்க தேச மக்களின் வாழ்வின் எழுச்சிக்கான சிந்தனையில் ஆழ்ந்திருந்த சேகுவேரா மெக்சிகோவில் கியூபப் புரட்சியாளர் பிடல் கெஸ்ட்ரோவை சந்தித்து நட்புப் பூண்டார்.

பின்னர் கியூபாவின் கொடுங்கோன்மை புரிந்த படிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் பிடலின் எண்ணத்தை அறிந்த சே, ஜூலை 26 இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

மேற்குலக ஆட்சியாளர்கள் அசாத்தியம் என நினைத்திருந்த புரட்சியை, கியூபாவில் சாத்தியப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட சே, கெஸ்ட்ரோவின் தோளோடு மாத்திரமன்றி சன்னங்களின் சல்லடைக்கும் தோள்கொடுத்தார்.

புரட்சியை காட்டுத் தீயாய் இலத்தீன் அமெரிக்க தேசமெங்கும் பரப்பும் நோக்கில் மெக்சிகோ, கொங்கோ, பொலிவியா என பல நாடுகளுக்கு பயணம் செய்த சேகுவேரா அங்குள்ள பேராளிகளுக்கு பயிற்சிகளையும் வழங்கினார்.

அன்று பொலிவியாவில் பொங்கியெழுந்தார் சே…

பதற்றமடைந்த CIA ன் கழுகுக் கண்கள் எட்டுத்திக்கும் நோட்டமிட்டன.

டொலர் கனவுகளுக்குள் அகப்பட்ட யூதாஸ் வழித்தோன்றல் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில், 1967 அக்டோபர் 7 ஆம் திகதியன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா, அக்டோபர் 9 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது யாருக்கும் தெரியாமலிருந்தது.

பின்னர் 1995 இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சேகுவேராவின் உடலென கருதப்பட்ட உடல் ஒரு விமானத்தளத்தினருகே கண்டுபிடிக்கப்பட்டது.

அது சேவின் உடல் என ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திய பின்னர், சே மற்றும் அவரது சகாக்கள் 6 பேரின் உடல்கள் கியூபாவுக்கு கொண்டுவரப்பட்டு 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி இராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன.

பிறர் நலனுக்காய் பொலிவியாவில் அன்று மூர்ச்சையிழந்த சேகுவேரா, இன்றும் புரட்சியின் முகவரியாய் மக்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *