கொரோனாவுக்கு சிகிச்சை 62 நாட்கள் கட்டணம் 1.12 மில்லியன் அமெரிக்க டொலர்!

கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. ஒவ்வொரு நாளும் அங்கு பாதிப்படைந்து வருபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மிகவும் மோசமான நிலையை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். பொதுவாக, இந்தக் கொரோனா வைரஸால் இறப்பவர்களில் அதிகமானவர்கள் வயதானவர்களாகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மிகவும் மோசமடைந்த நாடுகளில் அனைத்துவிதமான வயதினரும் உயிரிழப்பதாகவே கூறப்படுகிறது. அதேநேரம், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், வயதானவர்கள் குணமாகி வரும் செய்திகள் மருத்துவர்கள் உட்பட பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் விதமாகவே உள்ளன.
வயதானவர்கள் வைரஸால் அதிகம் பாதிப்படையாமல் இருக்க அரசுகள் கூடுதலாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. வைரஸ் பாதிப்புக்கு எதிராக கடுமையாகப் போராடி வயதானவர்கள் பலர் மீண்டு வருகின்றனர். அவர்களை மருத்துவர்களும் உறவினர்களும் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் சிகிச்சை முடிந்து செல்லும்போது மருத்துவமனை பணியாளர்கள் கைகளைத் தட்டி வாழ்த்தி அனுப்பும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அவ்வபோது வெளியாகி வைரலாவது உண்டு. அவர்கள் உயிர் பிழைப்பதற்காக மருத்துவர்கள் தீவிரமான சிகிச்சை அளிப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக செலவாகும் பணம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சியாட்டிலைச் சேர்ந்த 70 வயதான நபர் ஒருவர் கொரோனாவை வென்று குணமடைந்திருக்கிறார். மருத்துவர்கள் அவரை வாழ்த்தி அனுப்பினாலும், அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் கட்டணம் (பில்) அவரது தலையைச் சுற்றவைத்துள்ளது .

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஃப்ளோர் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 4-ம் திகதி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சுமார் 62 நாள்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அதாவது, கடந்த மே மாதம் 6-ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அன்றைய தினம் அவரிடம் சுமார் 181 பக்க கட்டண பில்லை மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு புத்தகத்தைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். அதில் இருந்த கட்டணத்தொகை சுமார் 1.12 மில்லியன் டொலர். அவர் அந்தக் கட்டணத்தை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
தீவிர சிகிச்சை பிரிவு, வென்டிலேட்டர் கட்டணம் என சுமார் 3,000 வகைகளின் கீழ் கட்டணங்கள் அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 29 நாள்கள் இருந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையின் கட்டணம் சுமார் 4,08,912 டொலராகவும் வென்டிலேட்டரின் கட்டணம் 82,215 டொலராகவும் அந்தக் கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைக்கேல் ஃப்ளோரின் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் என அனைத்தும் ஒரு கட்டத்தில் மிகவும் பாதிப்படைந்ததாகவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள சுமார் 1 லட்சம் டொலர்கள் ஆனதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மொத்தக் கட்டண ரசீதில் நான்கில் ஒரு பகுதி ஃப்ளோர் உயிருடன் இருக்க தேவையான மருந்துகளை வாங்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் இந்தக் கட்டணத்திற்கான காரணங்களை தெரிவித்திருந்தாலும் இந்தச் செய்தி ஃப்ளோருக்கு மட்டுமல்லாமல் இந்தச் செய்தியை அறிந்த அனைவரிடமும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *