கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100 கோடி பேரை உச்சகட்ட வறுமைக்கு தள்ளிவிடும்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100 கோடி பேரை உச்சகட்ட வறுமைக்கு தள்ளிவிடும் என ஆய்வு முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவால் உலக பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தை நோக்கி செல்லும் நிலையில், எதிர்கால பொருளாதார நிலவரம் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக் கழகம் ஆகியவை ஐநா பல்கலை.யான பொருளாதார வளர்ச்சி ஆராய்ச்சிக்கான உலக நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.
இதில், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உச்சகட்ட வறுமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர வருவாய் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், உலகளாவிய வறுமை நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகள் உலகளாவிய வறுமையின் மையமாக மாறும் என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் சம்பளம் ரூ.142 என்ற வறுமைக் கோட்டை நிர்ணயித்து நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில், பாதுகாப்பற்ற வேலை, பணிநீக்கம் போன்றவற்றால் உலகின் ஏழை மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.3,750 கோடி வருவாய் இழப்பை சந்திப்பர். இதனால், பலர் வறுமையின் தீவிரத்தை எட்டுவர். இதில், அதிகபட்சமாக தெற்காசியாவில் 39.5 கோடி பேர் உச்சகட்ட வறுமைக்கு தள்ளப்படுவர். அதிலும் குறிப்பாக இந்தியா கடுமையான பாதிப்பை சந்திக்கும். அடுத்ததாக சகாரா கீழமை ஆப்ரிக்க நாடுகளில் 11.9 கோடி உச்சகட்ட வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்.

இந்தியாவுக்குப் பிறகு நைஜீரியா, எத்தியோப்பியா, வங்கதேசம், காங்கோ, தான்சானியா, பாகிஸ்தான், கென்யா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாடுகள் மோசமான பாதிப்பை சந்திக்கும். ஆனாலும், இந்தியா, எத்தியோப்பியா இரு நாடுகளும் தங்களின் வறுமை எண்ணிக்கை படிப்படியாக குறைத்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளால் தனிநபர் வருமானம், நுகர்வு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய சுருக்கம் இந்த முன்னேற்றத்தில் சிலவற்றை அழிக்கக்கூடும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்பதால், 2030ம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை இப்போதில் இருந்தே தொடங்க வேண்டுமென அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1900 முதல் 2018 வரை…
கொரோனாவால் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா உள்ளிட்ட பத்து நாடுகளில், இந்தியா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியா ஆகியவை கடந்த 1990ல் வெளியான உச்சகட்ட வறுமை பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருந்தன. அந்த நிலை 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *