சீன ஜனாதிபதி மீது வழக்கு!சாட்சியாக மோடியும் ட்ரம்பும் சேர்ப்பு

கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் தொடர்பாக சீன ஜனாதிபதி மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் சாட்சியாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்த கொடூர வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று உலகின் பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

உலகளவில் கிட்டத்தட்ட 74.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 1.15 லட்சம் பேர் இறந்தும் உள்ளனர். பல நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கிடையில், பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் பெட்டியா நகரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வழக்கறிஞர் முராத் அலி என்பவர் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடுவர் மன்றம், வருகிற 16ம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வழக்கை தொடுத்த வழக்கறிஞர் முராத் அலி கூறுகையில், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் உள்ளிட்டோர் கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்ப சதி செய்துள்ளனர். இவ்வழக்கில் இந்திய நாட்டின் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை சாட்சியாக சேர்த்துள்ளேன். கொரோனா காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.

ஆதாரங்களாக சமூக, அச்சு ஊடகங்கள் மற்றும் பல்வேறு மின்னணு ஊடகங்களில் வெளியான செய்திகள், உலக சுகாதார அமைப்பின் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விபரங்களை சமர்பித்துள்ளேன். வருகிற 16ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது’ என்றார். கொரோனா விவகாரத்தில் சீனா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரி வரும்நிலையில், பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர், உலக சுகாதார இயக்குனர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *