தன்னம்பிக்கையோடு வாழப் பழகுவோம் கொரோனா போன்ற நோயும் நம்மைவிட்டுக் கடந்துபோகும்!

ஒருபுறம் கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்களும், காவலர்களும் அரசும் போராடிக்கொண்டிருக்க, மறுபுறமோ அர்த்தமின்றிப் பயத்துடன் வாழந்துகொண்டிருக்கும் தன்னம்பிக்கையற்ற மனிதர்களையும் இத்தகைய தருணத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. தனிமையில் இருந்தால் மட்டுமே இந்த நோயை விரட்டலாம் என அறிவுறுத்திய பிறகும் தனிமையில் வாழ்வதை தண்டனையாக நினைத்துக்கொண்டு நேரத்தை வீணடித்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பிக்கொண்டு விடுமுறைகளைப் பயனற்ற வகையில் கழித்துக் கொண்டிருப்பதுதான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று மட்டும் புலப்படுகிறது. மனதில் தோன்றும் தேவையற்ற அச்சமும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களும் மனதில் சுமைகளாக மாறி, தன்னம்பிக்கையற்ற சூழல் உருவாகி, அதனால் எதிர்மறையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு குணமாகிச் சென்றவர்கள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்துகொண்டுதானிருக்கின்றன. அத்தகைய குணமடைந்த மனிதர்கள் மருந்தால் மட்டும் குணமாகிவிட்டார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். மருந்துடன் சேர்ந்த மனஉறுதியாலும்தான் அத்தகைய மனிதர்கள் குணமாகி உள்ளார்கள். ஓர் அரசன் தன்னுடைய சிறிய படைகளை வைத்துக்கொண்டு பெரிய படைகளையெல்லாம் வென்றார். அவ்வளவு சாமர்த்தியம் மிக்கவர். ஆனால், அவரது தளபதி எப்போதும் எதிர்மறை எண்ணம் கொண்டவர். ஒரு சமயம் அவர் எதிரியின் மீது படையெடுத்துச் செல்லும்போது, அவரது தளபதிக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்தப் போரில் நாம் வெற்றி பெற முடியுமா? என்பதுதான் அது. உடனே துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மெதுவாக அரசரிடம் கேட்டுவிட்டார். அரசரும், ‘‘சரி அதை நாம் முடிவு செய்ய வேண்டாம், பூவா தலையா போட்டுப் பார்ப்போம். பூ வந்தால் தோற்றுவிடுவோம்.

எனவே, போருக்குப் போவதைத் தவிர்த்துவிடுவோம். தலை விழுந்தால் போருக்கு போவோம். வென்று திரும்புவோம். என்ன சொல்கிறீர்கள்? ஏனென்றால் போருக்குச் செல்லும்போது எதிர்மறை எண்ணங்களுடன் போக வேண்டாம்’’ என்று கூறினார்.அனைவர் முன்னிலையிலும் பூவா தலையா போட்டுப் பார்க்கலாம் என்று தங்க நாணயத்தைச் சுழற்றினார். தலை விழுந்திருந்தது. அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. எல்லோரும் உறுதியான முடிவோடு போருக்குச் சென்றார்கள். வெற்றியோடு திரும்பினார்கள். பிறகு கோலாகலமாக வெற்றிவிழா நடந்தது. தளபதி உரை நிகழ்த்தினார். “இந்த வெற்றியை தங்க நாணயம்தான் முடிவு செய்தது. அதனால் விதியை யாரால் வெல்ல முடியும்?” என்று கூறினார்.

அப்போது அரசர் தன்னிடம் இருந்த தங்க நாணயத்தை ரகசியமாக தளபதியிடம் காண்பித்தார். அந்த நாணயத்தில் இரண்டு பக்கமும் தலைதான் இருந்தது. அப்போது அரசர் சொன்னார், “உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணத்தைப் போக்குவதற்குத்தான் நான் இவ்வாறு செய்தேன். வெற்றியின் ரகசியம் மனஉறுதியில்தான் இருக்கிறது” என்றார்.அதுபோன்றுதான் இன்றைய நிலையும் உள்ளது. தனிமையிலே மனஉறுதியுடன் செயல்பட்டு தனிமையை தன்னம்பிக்கை நிறைந்ததாக மாற்றும் சக்தியை நாம் கண்டறிய வேண்டும். அந்த சக்தியை நீங்கள் எங்கும் தேடத் தேவையில்லை. அது தன்னம்பிக்கை நிறைந்த நல்ல புத்தகங்களில் உள்ளது என்பதை உணர்ந்து விடுமுறை காலங்களில் அத்தகைய புத்தகங்களைப் படித்து தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம்.

சமீபத்தில் படித்த ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 21 வயது இளைஞர் ஒருவர் ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார். இதை தினமும் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய தந்தை தன்னுடைய மகன் சாதாரண சிறிய வேலைகளையும் செய்யும்போதெல்லாம் சிரமப்படுகின்றானே என்று வருந்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவர் அந்த இளைஞரை பரிசோதனை செய்துவிட்டு, ‘‘நரம்புக் குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் உங்களைத் தாக்கியுள்ளது. உடல் தசைகளைப் பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும். இரண்டு வருடங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இறந்துவிடுவீர்கள்’’ என்று தெரிவித்தார். அந்த இளைஞரின் தந்தை மிகுந்த மனவருத்தம் அடைந்தார். ஆனால், அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி, ‘‘இந்த நோய் எனது உடலை மட்டும் பாதிக்குமா அல்லது என்னுடைய மூளையையும் பாதிக்குமா?’’ என்று கேட்டார் சாதாரணமாக. அதற்கு மருத்துவர் சொன்னார், ‘‘இந்த நோய் உங்கள் மூளையை பாதிக்காது. கழுத்துக்கு கீழே உள்ள அத்தனை உறுப்புகளையும் பாதிக்கும்’’ என்றார். உடனே அந்த இளைஞர், ‘‘என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது. எனது மூளைதான் எனது ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது’’ என்றார் தன்னம்பிக்கையுடன்.

ஒரு சில ஆண்டுகளில் அந்த இளைஞரால் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அப்போதும் அந்த மனிதர் தனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் நவீன அறிவியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். தனது கருத்துகளை தொகுத்து சுவாரஸ்யமான புத்தகங்களாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்து 2018ஆம் ஆண்டு தனது 76 வயதில் மறைந்தார். அவர்தான் நவீன அறிவியலின் தந்தை என போற்றப்பட்ட இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹுக்கிங்ஸ். மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டதால்தான் ஸ்டீபன் ஹுக்கிங்ஸ் மரணத்தை விரட்டி காலத்தை வென்ற மாமேதையாக போற்றப்படுகிறார். இன்றைய மாணவர்களுக்கு அவர் சொல்வது என்னவென்றால், ‘வாழ்க்கை கடினமானதுதான், ஆனால், கடினமான சூழலில்தான் வெற்றிக்கான வழியைக் கண்டுபிடிக்க முடியும்’ என்கிறார். அதுமட்டுமல்ல… ‘வாழப் பழகு, போராடு, அச்சத்தைத் தூக்கி எறி, வெற்றியை நோக்கிப் புறப்படு’ என்கிறார்
ஸ்டீபன் ஹுக்கிங்ஸ். 

அதேபோலத்தான் பாரதியும் ‘நினைவு நல்லது வேண்டும்’ என்கிறார். நல்ல நினைவுகள் உள்ளத்தில் தோன்றினால், அவை வாக்கினில் வெளிப்படும் என்பதுதான் பாரதியின் கருத்து. ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளைப் படிப்படியாக குறைத்துக்கொண்டேவந்தால், நேர்மறை எண்ணங்கள் தானே வளரத் தொடங்கும். கூடவே மனஉறுதியும் வளரும்.உலகத்தில் இக்கட்டான சூழல் ஏற்படும்போது, அதைக் குறுக்கீடுகள் என நினைத்து கீழே விழாமல் வீறுகொண்டு எழவேண்டும். காற்றுள்ள பந்து கீழே விழுந்ததும் மேலும் வீறுகொண்டு எழும். மனிதனும் அதுபோல எழவேண்டும். ஒரு மன்னனுக்கு முனிவர் ஒருவர் பெட்டி ஒன்றைத் தருகிறார். எப்போது நெருக்கடி வருகிறதோ அப்போது அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கும்படி முனிவர் கூறுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வேற்று நாட்டுப் படைகளிடம் தோல்வி அடைந்த மன்னர் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்படுகிறார். அவர் தனிமையில் அமர்ந்தபடி தன் வாழ்க்கையின் வீழ்ச்சி குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, முனிவர் கொடுத்த பெட்டி நினைவுக்கு வரவே, அந்தப் பெட்டியை ஆர்வத்துடன் திறந்து பார்க்கிறார். அதன் உள்ளே ஒரு வாசகம், ‘இதுவும் கடந்து போகும்’ என்றிருந்தது. அந்த வாசகத்தையே திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தார். இப்போதைய நிலை மாறும் என்ற அர்த்தம் புரிந்தது. அவருக்குள் இப்போது நம்பிக்கை வளர்ந்தது. அதனால் மனஉறுதி பெற்றார். ரகசியமாகப் படைதிரட்டி, போரிட்டு மீண்டும் தன் நாட்டைக் கைப்பற்றினார். ஒரு வாசகம் தரும் மாபெரும் நம்பிக்கை, மனஉறுதியை ஏற்படுத்தி மலையைக்கூட புரட்ட வைக்கும் என்பதை இந்தக் கதையின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

அதுபோலத்தான் இந்த கொடிய நோயும் கடந்து போகும் என்ற மனஉறுதியுடன் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும், தீமை நடந்தால் எதிர்த்து வெல்ல முடியும் என்ற துணிச்சலும் ஒவ்வொரு மனிதனுக்கும் வந்தால்தான் இந்த சமூகம் வெற்றி பெறும். அத்தகைய துணிச்சலை பெற வேண்டுமென்றால் தனிமையில் தன்னம்பிக்கையோடு வாழப் பழகுவோம்! கொரோனா போன்ற கொடிய நோயும் நம்மைவிட்டுக் கடந்துபோகும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *