அமெரிக்க அதிகாரி தனது பயணப்பையில் நாட்டிற்குள் கொண்டு வந்தது என்ன?

அமெரிக்க அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னர் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையைப் புறக்கணித்து நாட்டிற்குள் பிரவேசித்தமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தன.

அந்த இராஜதந்திர அதிகாரி குறித்து இன்றைய அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த அதிகாரி அமெரிக்க இராணுவ உறுப்பினரா என கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், அது குறித்து எதனையும் கூற முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன பதிலளித்தார்.

இந்நிலையில், அவர் அமெரிக்க தூதுவராலயத்தில் பணியாற்றுபவர் அல்ல, இந்து பசுபிக் கடற்படை அதிகாரி என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அவர் தனது பயணப்பையில் கொண்டு வந்தது என்ன? அது தொடர்பில் ஆராய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த இராஜதந்திரியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, வியன்னாவின் அடிப்படையிலான சிறப்புரிமையைப் பயன்படுத்தி வேறு எவரேனும் இராணுவ அதிகாரி நாட்டிற்குள் வருகை தந்திருப்பது சாதாரண விடயம் அல்ல. இது கவனமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டியதொரு விடயம். உண்மையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளாரா, இல்லையா என்பது தொடர்பில் எமது சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆராய முடியாத நிலை உள்ளது

என விமல் வீரவன்ச மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *