கொரோனா வைரஸ் தொற்றால் அன்பழகன் காலமானார்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். தி.மு.க.வின் சென்னை மேற்கு மண்டல செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இதற்கிடையே, மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாக இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலாமானார். காலை 08.05 மணியளவில் ஜெ.அன்பழகனின் உயிர் பிரிந்தது. 1958-ல் பிறந்த  ஜெ.அன்பழகன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001-ல் முதன்முறையாக தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2011, 2016-ல் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  ஜெ.அன்பழகன் 15 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக திறம்பட பணியாற்றி வந்தார். 2015 பெருவெள்ளம், 2016 வர்தா  புயல் போன்ற பேரிடர் காலங்களில் தீவிரமாக களப்பணியாற்றியவர். அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆதி பகவான், யாருடா மகேஷ் போன்ற படங்களை தயாரித்தார். இன்று ஜூன் 10-ம் தேதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *