மனிதனின் வெற்றி தோல்வி பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது!

உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் அடுத்தவரை எப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். பார்வைகள்தான் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் அவன் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்க்கும் பார்வையில் பல வித்தியாசங்கள் இருக்கிறது. யாரும் ஒரே மாதிரி பார்ப்பதே இல்லை. ஒவ்வொருவரின் பார்வையும் தனித்துவமாக இருக்கும் அந்த பார்வை முறைதான் அவர்களை ரசிக்கக்கூடியவர்களாகவும், விரும்பக்கூடியவர்களாகவும் மாற்றுகிறது.  சிலர் தலையைத் தாழ்த்தி மேலே பார்த்து பவ்யமான தோற்றத்தை ஏற்படுத்தும் பார்வை பார்ப்பார்கள். அப்படியான பார்வை பார்ப்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். காரணம், அப்படிப் பார்ப்பவர்களுடைய கண்கள் பார்க்கப் பெரிதாகத் தெரியும். பெரியவர்களைக் குழந்தைகள் பெரும்பாலும் அப்படித்தான் பார்ப்பார்கள். அதனாலேயே அப்படிப் பார்ப்பவர்கள் மீது ஒரு பாச உணர்வு ஏற்படும். அன்பு வலுப்பெறும்.ஓரப் பார்வை பார்த்தவளே…  பார்வையால் உலகத்தை ஈர்த்தவர் இங்கிலாந்து இளவரசி டயானா. இளவரசி டயானாவின் எந்தப் புகைப்படத்தையும் எடுத்துப் பாருங்கள். முதலில் நீங்கள் அவரது கண்களைத்தான் பார்ப்பீர்கள்.
அதில் ஒரு ஈர்ப்பு இருப்பது ஒருபுறம் இருந்தாலும், அவர் கழுத்தைச் சரித்து இமை உயர்த்தியே பார்த்தபடி இருப்பார். அது எப்போதும் ஒரு குழந்தையின் பார்வையைப் போலவே இருக்கும். அதனாலேயே அவரைப் பார்ப்பவர்கள் அந்தப் பார்வைக்கு ஈர்க்கப்பட்டவர்களாகவேயிருக்கிறார்கள். இளவரசி டயானாவின் தனிப்பட்ட வாழ்வில் எத்தனையோ சர்ச்சைகள் எழுந்தபோதும், அவர் மீதான வசீகரம் மக்களிடம் குறையாமல் இருந்ததற்கு அவரின் அந்தப் பார்வைதான் முக்கியக் காரணம்.பார்வை முத்திரைகள்  பார்வைகள் பலவிதமாக இருந்தாலும், கண் இமைகளைக் கீழிறக்கி, அதேசமயம் புருவங்களை உயர்த்தி மேலே பார்த்து உதடுகளை மென்மையாகப் பிரித்துக் காட்டுவது பல நூற்றாண்டு களாக கடைபிடிக்கப்பட்டு வரும் கவர்ச்சி முத்திரைகளில் ஒன்று. 

இதற்கு மிகச் சரியான உதாரணம் மர்லின் மன்றோ. மன்றோவின் எந்தப் புகைப்படத்தையும் பாருங்கள், இந்தப் போசில் கிறங்கடிக்கும் பார்வை பார்த்திருப்பார். அந்தப் பார்வையே ஒரு கவர்ச்சி முத்திரையாக இருக்கும். அவருக்கு இணையாகப் பார்வைக் கவர்ச்சி முத்திரையால் ஈர்த்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதாவின் பார்வை வசீகரம் பல கதைகள் சொல்லும். உலகம் முழுக்க பெரும்பாலான கனவுக் கன்னிகளின் காதல் முத்திரைகள் இந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பதைப் பார்க்கலாம்.நேர்கொண்ட பார்வை  ஒருவரைக் கண்ணோடு கண் நேராகப் பார்த்தால், அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவே முடியும். சிலரோடு பேசும்போது மிகவும் வாஞ்சையாக, சௌகர்யமாக உணரச் செய்வார்கள். வேறு சிலர் அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதோடு, நம்மை அவஸ்தையாக உணரச் செய்வார்கள். 

பொதுவாக மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால்தான் அடுத்தவரைப் பார்க்கவே செய்வார்கள். ஒருவர் அடுத்தவரைப் பார்க்கிறார் என்றால், அந்த நபர் ‘இவர் நம்மை நேசிக்கிறார்’ என்ற புரிதலை எடுத்துக்கொண்டு, பதிலுக்குப் பார்க்கத் தொடங்குகிறார். அப்படி கண்ணோடு கண் பார்க்க
முடியாத சந்திப்புகளில்தான் படபடப்பு ஏற்படுகிறது. நம்பகத்தன்மை குறைந்துபோகிறது. முக்கியமான சந்திப்புகளில் கறுப்புநிறக் கண்ணாடியை தவிர்க்க வேண்டும் என்று சொல்வது அதற்காகத்தான். கண்கள் தெரியாத கறுப்புநிறக் கண்ணாடி அணிந்தவர்களுடன் நம்மால் ஒருபோதும் இயல்பாக, மெல்லிய படபடப்பு இல்லாமல் பேசவே முடியாது. 

உடல்மொழியின் மற்ற அசைவுகளைப் போலவே ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையின் தீவிரமும் முக்கியமானது. ‘உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு’ என்ற காதல் வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்படி ஒருவரைப் பார்த்துக்கொண்டேயிருந்துவிட முடியுமா? பார்வையை எடுக்காமல் ஒருவரை எவ்வளவு நேரம் பார்க்கலாம்? ஒரு நபரிடம் பேசும்போது அவரை எத்தனை நேரம் பார்க்கலாம்? என்ற கேள்விகள் முக்கியமானவை.  யாரையும் தொடர்ந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்துவிட முடியாது. அதே நேரம் அது சந்திக்கும் நபரின் நெருக்கத்தையும், அந்த மனிதரது கலாசாரத்தையும் பொறுத்து மாறுபடும்.  ஜப்பானியர்களிடம் பேசும்போது அவர்கள் எத்தனை நேரம் உங்களைப் பார்த்து பேசுகிறார்களோ அதே நேரம்தான் நீங்கள் அவரைப் பார்த்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். இது அவர்களது கலாசாரம். இந்தியர்களிடம் அப்படி இல்லை. காதலன் தன்னை பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று உரிமையான காதலி எப்போதும் எதிர்பார்ப்பாள். ஆனால், அவள் வேறு எங்காவது பார்த்தபடி இருப்பாள். அதேபோல் ஒரு மேல் அதிகாரி, தன்னிடம் பதில் சொல்லும்போது மட்டும் ஊழியர் தன்னைப் பார்க்கவேண்டும் என்று நினைப்பார். மற்ற நேரத்தில் பார்த்தால், என்ன என்பதுபோல் அனல் பார்வை பார்ப்பார். அதோடு ஊழியர் சொல்வதை மேல் அதிகாரி ஏற்றுக்கொள்ளாதபோது அதைச் சில விநாடிகள் ஊடுருவுவது போல் பார்த்து பார்வையாலேயே எரித்துவிடுவார். 

அடுத்தவரைப் பார்க்கும் பார்வையிலும் எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது. முதன் முறையாக இரண்டு பேர் சந்தித்து கண்ணோடு கண் பார்க்கும்போது இருவரில் சற்று தாழ்ந்த நிலையில் இருப்பவர்தான் முதலில் பார்வையை விலக்கிக்கொள்ள வேண்டும். அதேநேரம், முதன் முறையாக இரண்டு பேர் சந்தித்து கண்ணோடு கண் பார்க்கும்போது முதலில் பார்வையை விலக்கிக் கொள்பவரின் மீது மற்றவர் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிடுகிறார். இது உடல்மொழியால் மட்டுமே நிகழும் தன்மை. உடல்மொழியின் இந்த பாவனைதான் ஒரு மனிதனின் ஆளுமையாக பரிணமிக்கிறது.  பார்வைகளின் எல்லை ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசப்படவே செய்கிறது. ஆண்கள் தூரத்தில் நிகழ்வதை அறியக்கூடியவர்களாகவும், பெண்கள் தங்கள் அருகில் நிகழ்வதை அறியக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இதுதான் ஆண்கள் வெளியில் பரிணமிப்பவர்களாகவும், பெண்கள் வீடு அலுவலகங்கள் போன்ற closed door இடங்களில் துல்லியமாகப் பரிணமிக்கக்கூடியவர்களாகவும் இருக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *