நடிகை ஜோதிகா ஐம்பதில் கால்பதிக்க தயாராகிறார்!

திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜோதிகா ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘தம்பி’ என்று வரிசை கட்டி பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு சமயத்திலும் பேசுபொருள் ஆகியிருக்கிறார். அவர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடித்த அனுபவத்தைக் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“உங்க ‘பொன்மகள் வந்தாள்’ அனுபவம் எப்படி இருந்தது?”

“இந்தப் படத்தில் ஐந்து இயக்குநர்களுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படங்களில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம், சத்யராஜ் சார், இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் என்று தொடர்ந்து எண்பதுகளின் உச்ச நட்சத்திரங்களோடு நடித்தது மறக்க முடியாதது. அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அவர்கள் எப்படி தங்களுடைய கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாக கற்றுக் கொண்டேன்.முதல் முறையாக வக்கீல் உடையணியும்போது ரொம்ப வலுவாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. வக்கீல் உடையணிந்து வசனங்கள் பேசி நடிப்பது சவாலாக இருந்தது.”

“படத்தில் வரும் நீளமான வசனக் காட்சிகளை எப்படி சமாளித்தீர்கள்?”

“படப்பிடிப்பு துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு  முன்பே படத்தின் ஸ்கிரிப்ட்டை இயக்குநர் பிரட்ரிக் கொடுத்துவிட்டார். பார்த்திபன்  சாருடன் நின்று கொண்டு வசனம் பேசி நடிப்பதே சவால்தான். பாக்யராஜ் சார், பார்த்திபன் சார் இருவரும் ஒரு முறை படித்துவிட்டு பேசிவிடுவார்கள். ஆனால், நான் என்னுடைய வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து பேசினேன். முக்கியமாக இந்தப் படத்துக்கு நானே டப்பிங் செய்துள்ளேன். படப்பிடிப்புக்கு வந்து டயலாக் பேப்பர் கொடுத்திருந்தால் என்னால் வசனம் பேசி நடித்திருக்க முடியாது.”

“பொதுவா உங்களுடைய படத் தேர்வு எப்படி இருக்கும்?”

“பிளாக் அண்ட் ஒய்ட் காலத்தில் வெளியான படங்களை இப்போதும் சிலாகித்து பேசுகிறோம். அதுபோல் நான் நடித்த படங்கள் காலங்கள் கடந்து பேசவேண்டும் என்பது என் ஆசை. அதை மனதில் கொண்டே படங்கள் ஒப்புக் கொள்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது. ஆனால் எனது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இப்போது நிறைய வலுவான கதைகள் வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகும் கூட மூன்று கதைகள் தேர்வு செய்து வைத்துள்ளேன். என் படங்களை பெண்கள் பார்க்கும் போது பெருமையமாக நினைக்க வேண்டும்.பெண் கதாபாத்திரத்தை மையாக வைத்து நான் நடித்த படங்கள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டதுதான். நான் இப்போது எல்லாம் ஒரு ஹீரோவாக உணர்கிறேன். 

இந்த ஆண்டு எனக்கு 41 வயது ஆகிறது. 41 வயதில் ஹீரோவாக உணர்வது அரிதானது என நினைக்கிறேன். கமர்ஷியல் படங்களிலிருந்து கிட்டத்தட்ட வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போது தான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது.”
“தொடர்ந்து சொந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறீர்களே?”

“எங்களுடைய நிறுவனத் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால்தான் 2டி நிறுவனம் எனக்கு சரியாக பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
சில படங்கள் ளை எந்தளவுக்கு பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொந்தப் பணத்தையே போட்டு தயாரித்து விடுகிறோம். ‘36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு நிறைய பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் வந்தது. அதை தயாரிப்பது சில பேர் மட்டுமே.”

“ஓடிடி தளத்தில் வெளியான உங்கள் படத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?”

“இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள்தான் பார்க்கிறார்கள். அதனால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்துத் தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை.  இப்போதுள்ள சூழலில் அனைத்துத் தரப்புக்கு எது நன்மையோ அதைத் தான் கவனிக்க முடியும். கொரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம்.

நடிகர்கள்- இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம்தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன்.

பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது. சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.”

“அடுத்து?”

“இது எனது 49-வது படம். அடுத்து வரவுள்ள 50-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவும் உங்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இந்த உயரத்தை ரசிகர்கள் கொடுத்த ஆதரவால்தான் அடைய முடிந்தது. எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர் சூர்யாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *