நான் கூறாத  திரிவுபடுத்தப்பட்ட செய்தியை முற்றிலும் மறுக்கிறேன்

   யாரோ ஒருவர் “ரின் ரீவி” போன்ற தனியார் ஊடகங்களுக்கு வழங்கிய தவறான கருத்துக்கு அமைய, திரிவுபடுத்தப்பட்ட குறித்த செய்தியை தான் முற்றிலும் மறுப்பதாக,  முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைச் சமூகம் எவருடன் இருக்கின்றார்களோ முஸ்லிம் சமூகமும் அவ்வாறு நடந்துகொள்வதே சிறந்தது. தம்மையும் தங்களது உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம்கள் புத்திசாதுர்யத்துடன் நிதானமாக செயற்படுவதே நல்லது என்று  தான் கூறியதை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தார்மீகக் கடமையெனக்  கூறியதாக சில ஊடகங்கள் தவறாக  அர்த்தப்படுத்தி எழுதியுள்ளதாகவும் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
   அத்துடன், நான் கூறாத ஒன்றைக் கூறியதாகத் திரிவுபடுத்தி இவ்வாறு மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை உருவாக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். அரசியல் இலாபம் தேடுவதற்காக  இவ்வாறான ஒரு சிலர் இன்று  சமூகத்துக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. நான் எந்தவொரு அரசியல்வாதிக்கும் விரல் நீட்டுபவனல்ல. அவ்வாறான எந்த எண்ணமும் என்னிடம் கிடையாது. நான் எந்த ஒரு  விடயத்தையும் சரியாகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் ஆராய்ந்ததன் பின்பே கூறுவேன். இதுதான் என்னுடைய உண்மையான நிலைப்பாடாகும்.
   இது தொடர்பில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
   முஸ்லிம்கள், பெரும்பான்மைச் சமூகம் இருக்கும் அரசாங்கத்துடன் இருந்து கொள்வதும்,  அரசாங்கத்துடன் ஒத்துப் போவதுமே ஒப்பீட்டு ரீதியில் நல்லது என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கூட, இக்கூற்றை நான் முஸ்லிம்கள் மத்தியில் அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். இது தவிர, அப்பாவி முஸ்லிம் மக்களைத் தவறாக வழி நடத்தும்  எண்ணத்துடன் எந்தவிதமான  கருத்துக்களையும் நான் ஒருபோதும் முன் வைக்கவில்லை.
    தனது சுய நலத்துக்காகவும் எதிர்கால அரசியலில் இருப்பை நிலைப்படுத்துவதற்காகவும் அப்பாவி முஸ்லிம் மக்களைத் தவறாக  வழி நடத்தப் பார்ப்பதாகவும் என்மீது ஒரு சிலரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
   இதேவேளை,  ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், முஸ்லிம் சமூகத்துக்கு வெளிப்படையாக இழைக்கப்படும் அநியாயங்களைக் கண்டும் காணாதது போன்று தான்  கருத்துக்களைக் கூறுவதாகவும்,
அத்துடன் ஜனாஸா எரிப்பு விடயத்தில் சமூகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் அப்பட்டமான அநியாயங்களை என்  போன்றவர்கள் தெரிந்திருந்தும், இன்னும் இந்தக் கூட்டத்துக்காக வக்காலத்து வாங்குவதாகவும் என்மீது இது போன்றவர்களினால் அபாண்டமாகப் பலி  சுமத்தப்பட்டுள்ளது.
   உண்மையில், முஸ்லிம்களுக்கென ஏதாவதொரு பிரச்சினை வரும்போது அந்த இடத்தில் முன்னிலை வகிப்பவன் நான் என்பதையும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 12 ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதையும்,  குறித்த மனு சார்பில் நான் நேரடியாகவே ஆஜராகவுள்ளேன் என்பதையும், அரசியல் இலாபம் தேட முற்படும் இது போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *