எக்ஸ்ரே மூலம் கொரோனா வைரஸை கண்டறியலாம்!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எளிதாகக் கண்டறிய உலக நாடுகள் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. கொரோனா வைரஸை துல்லியமாகக் கண்டறியப் பயன்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வர மூன்று முதல் நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் எந்தவிதமான அறிகுறியுமே இல்லாமல் 98% கொரோனா தொற்று ஏற்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசித்துவரும்  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் 4-ஆம்  ஆண்டு பயிலும் மாணவர் உ.கிருபா சங்கரும் மற்றும் சில மாணவர்களும் இணைந்து, ஒருவரின் எக்ஸ்-ரேவை பகுப்பாய்வு செய்து சில விநாடிகளில் துல்லியமாக கண்டறியும் மென்பொருள் (Software) மற்றும் மித்ரன் மொபைல் செயலியை (Mobile App) கண்டுப்பிடித்துள்ளனர். தனது கண்டுபிடிப்பு பற்றி கிருபா சங்கர் கூறுவதைப் பார்ப்போம்…
‘‘இந்த கொரோனா பரிசோதனை முறையை ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அதாவது, செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளேன். பொதுவாக நமக்கு ஒரு எக்ஸ்ரே ஸ்கேன் பண்ணி நோய்த் தொற்று இருக்கின்றதா? இல்லையா? அல்லது அது எந்த வகையைச் சேர்ந்த வைரஸ் தொற்று என்பதை துல்லியமாக கண்டறியும் வகையில் ஒரு மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளோம். ஒரு எக்ஸ்-ரேயை எடுத்து நேரடியாக மென்பொருளில் இணைத்தால் ஒன்றிரண்டு நொடிகளிலேயே அதனைக் கண்டுபிடித்துவிடும். இதற்கு ‘மித்ரன் கோவிட் 19’ எனப் பெயரிட்டுள்ளோம். எக்ஸ்-ரே கருவியுடன் இணைந்து இயங்கும் இந்த மென்பொருளானது உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா மட்டுமல்லாமல் நுரையீரல் தொடர்புடைய சார்ஸ், நிமோனியா பாக்டீரியா தொற்று உள்ளிட்ட நோய்களை கண்டறியவும் இந்த மென்பொருள் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் மூலம் அதிகப்படியான நபர்களுக்கு சில மணி நேரத்தில் நோய்த் தொற்று உள்ளதா என கண்டறியலாம். எக்ஸ்-ரே கருவி என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. அரசு இந்த மென்பொருளை இலவசமாக எக்ஸ்-ரே கருவியுடன் இணைத்துக் கொடுத்துவிட்டால் பலருக்கு கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா என கண்டறியலாம். மேலும், எத்தனை பேர் பரிசோதனை செய்துள்ளார்கள், அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சீக்கிரமாக பரிசோதனை செய்ய எளிதாக உதவும்.ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தனியொருவனாக முயற்சியில் இறங்கினேன். ஓரளவுக்கு வெற்றி கண்டவுடன் அதற்கு உதவியாக எங்கள் கல்லூரியில் பயிலும் பல மாணவர்களையும் இணைத்துக்கொண்டு முழுமையான வடிவமைப்பு கொடுத்து மித்ரன் எனப் பெயரிட்டோம். சமூக விலகல், தனிமனித இடைவெளி, சுயபரிசோதனை, தனிப்பட்ட கண்காணிப்பு, மருத்துவ உதவி, ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் பெரும் வசதி என பல்வேறு அம்சங்களை இந்த மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.
நாங்கள் கண்டறிந்துள்ள மென்பொருள் நோயின் தீவிரத்தை ஒருசில நொடிகளில் துல்லியமாகக் கண்டறிந்துவிடும். இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இன்னும் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு முழு வெற்றி கண்டால் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களை எளிதாக கண்டறியப் பயன்படுவதோடு தனிமைப்படுத்துதலுக்கும் பெரும் உதவியாக இருக்கும்’’ என்றவர் செல்போன் செயலியின் செயல்பாடுகள் பற்றியும் விவரித்தார். ‘‘இச்செயலியில் கொரோனாவைப் பற்றிய புதிய தகவலும், புள்ளிவிவரமும் மற்றும் தடுப்பு முறைகளையும் தெரிந்துகொள்ளலாம். மேலும் அருகிலுள்ள மருத்துவமனைகளையும், மருத்துவ உதவியையும் அறிந்துகொள்ளமுடியும். இந்த செயலி மூலம் மளிகை மற்றும் உணவுப் பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும்.
கொரோனா பாதிக்காமல் இருக்க சமூக விலகல், உடனடி  தொடர்பு சோதனை, தனிப்பட்ட கண்காணிப்பு, சமூக உதவிக்கான இணைப்பு (Online Shopping), மருத்துவ உதவி (மருத்துவமனை மற்றும் மருந்தகம்) தொடர்பு சேவை போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் மொபைல் செயலி (Mobile App) மற்றும் வலை போர்டல் (Web Portal) உருவாக்கப்பட்டுள்ளது.இதன்  மூலம் ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நமது மித்ரன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *