இலங்கையில் கொரோனா தொடர்பில் பல விடயங்களை அரசாங்கம் மறைக்கிறது

அரசாங்கம் தனது பலவீனங்களை மறைப்பதற்காக கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பற்றிய தகவல்களை எதிர்க்கட்சியிடம் மறைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்தோடு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியை உறுதிப்படுத்த காலி மாவட்ட உறுப்பினர்கள் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தான் உள்ளிட்ட எதிர்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாளொன்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை 5000 ஆக அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 690 பி.சி.ஆர். பரிசோதனைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளைப் போன்று கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் அந்நாட்டு அரசாங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்றே ஐக்கிய தேசிய கட்சியும் ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாகத் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த விக்கிரமசிங்க,

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போதும் தான் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் நாட்டில் இனங்காணப்பட்டிருந்த நோயாளர்களின் எண்ணிக்கை 102 என்பதோடு மரணங்களும் பதிவாகியிருக்கவில்லை. எனினும் தற்போது வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளமையையும் இதன் போது ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளை மாத்திரமின்றி சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் புற்றக்கணித்தமையினாலேயே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் சனத் தொகையில் மூன்று மடங்கு சனத் தொகையைக் கொண்ட சீனாவின் அயல் நாடான வியட்நாமில் நோயாளர்களின் எண்ணிக்கை 350 ஆக மாத்திரமே காணப்படுகிறது.

சுகாதாரத்துறையினரின் முறையான வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டமையே அந்த நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்டுள்ளமைக்கானதும் இது வரையில் மரணங்கள் பதிவாகாமைக்கான காரணம் ஆகும்.

அத்தோடு சீனாவுக்கு அயல் நாடான கம்போடியாவிலும் இது வரையில் மரணங்கள் பதிவாகாமையையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமையின் காரணமாகவே நீண்ட நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டியேற்பட்டது.

இதனால் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியாமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதோடு கொரோனா வைரஸ் பரவலைக் கொண்டு அரசாங்கம் அரசியல் இலாபம் தேடவே முயற்சிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சுமத்தினார்.

மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் பிரதேசசபை உறுப்பினர்களால் அரசியல் மயமாக்கப்பட்டதையே அவர் சுட்டிக்காட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *