சென்னையில் அதிகரிக்கும் கொரோனாவால் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு?

சென்னையின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 50 சதவிகிதத்துக்கும் மேல் வட சென்னையில் இருப்பதால் அந்தப் பகுதியில் 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்வதாகவும், விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து முறையாக திட்டமிடாததால் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 20,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் வடசென்னைக்கு உட்பட்ட 6 மண்டலங்களில் இருப்பதாக கூறுகின்றன அரசின் புள்ளி விவரங்கள். சென்னையின் பிற பகுதிகளை விட வடசென்னையில் தான் உயிழப்பும் அதிகமாக ஏற்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 251 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் வடசென்னையில் 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 மண்டலங்களில் உள்ள 65 வார்டுகளில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று காலை நிலவரப்படி 3,717 பேரும், தண்டடையார்பேட்டையில் 2,646 பேர், திரு.வி.கநகர் 2,073 பேர், தேனாம்பேட்ைட 2,374 பேர், கோடம்பாக்கம் 2,323 பேர் தொற்று எண்ணிக்கை தலா 2 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

அதைப்போன்று அண்ணாநகர் 1,864 பேர், அடையாறு 1,158 பேர், வளசரவாக்கம் 1,043 பேர் என பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறது. மேலும் ஊரடங்கு தளர்வுக்கு பின் வடசென்னையில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மக்கள் நெருக்கமே காரணம் எனக் கூறி வரும் அதிகாரிகள் கடைவீதிகள், சந்தைகளில் காணப்படும் நெரிசலை காரணம் என்று கூறுகின்றனர். அதைப்போன்று சமூக விலகல், முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதின் மூலம் சென்னையின் மற்ற இடங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே முறையான முன்அறிவிப்பு செய்து அதன் பிறகு 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்: ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு அடைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அவற்றில் 6,700 தெருக்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே வடசென்னை நீங்கலாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள தெருக்களை முழுவதும் அடைத்து மக்கள் நடமாட்டத்தை குறைத்து தொற்று பரவாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் எல்லைகளும் சென்னையோடு இணைந்து இருப்பதால் அந்த மாவட்டங்களில் உள்ள தெருக்களையும் அடைக்கும் திட்டம் உள்ளது என்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *