இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்!

இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிக்கு வலுவான பாதையமைத்துக் கொடுப்பதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகள் இவ்வாரம் நிறுவப்பட்டுள்ளதை வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச அமைப்பான பேர்ள் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“தேசிய பாதுகாப்பு என்ற பெயரிலும், உலகளாவிய கொள்ளை நோய்க்கான எதிர்வினைகளில் ஒன்றெனத் தெரிவித்தும் அரச நடவடிக்கைகளை இராணுவமயமாக்குவதற்கான ஜனாதிபதியின் முன்னெடுப்பின் ஒரு தீவிர விரிவாக்கமாக இப் புதிய ஜனாதிபதி செயலணிகள் அமைகின்றன.

இவ்விரு புதிய செயலணிகளும் சிங்களவர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டுள்ளதாகத் தோன்றுவதோடு, அவர்களில் சிலர் போர்க்குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் எனவும் தெரிகின்றது.

இது மக்கள் திரள் மீது பாரிய அட்டூழியங்களை மேற்கொண்டவர் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவோடு, இலங்கை தனது இனத்துவ ஆட்சியை வலுப்படுத்துவதையே சுட்டிக்காட்டுகின்றது.

“கோட்டாபய ராஜபக்சவின் புதிய ஜனாதிபதி செயலணிகள், ஏலவேயுள்ள இராணுவமயமாக்கலையும், அரச அனுசரணையுடன் தமிழர் அதிகம் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் அதிகப்படுத்தி, பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தையும், உறுதியற்ற தன்மையையும் உருவாக்கும்” என்று பேர்ள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாஷா மனோரஞ்சன் தெரிவித்தார்.

இச்செயலணிகளை வழிநடத்த கோட்டாபய ராஜபக்ச போர்க்குற்றவாளிகளை நியமித்துள்ளமை, 2009 இல் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு வகைப்பொறுப்புக்கூற வேண்டும் என்ற சர்வதேச அழைப்புகளை அவர் முற்றிலும் புறக்கணிப்பதையே வலியுறுத்துகின்றது.

ஒழுக்கமான, நற்பண்பு மிக்க மற்றும் சட்டமுறைமையான சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி ஆனது முற்றுமுழுதாக இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் ஆனது.

இதில் ஐ.நா. மற்றும் ஐக்கிய அமெரிக்காவினால் போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் என நம்பத்தகுந்த முறையிற் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.

சமூகக் குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது என்பதாக இச்செயலணியின் குறிக்கோள்கள் தெளிவற்ற முறையில் எழுதப்பட்டுள்ளன.

இது இச்செயலணிக்குப் பரந்துபட்ட பொறுப்புகளை அளித்து, மனித உரிமை அமைப்புகள், தமிழ் குடிசார் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பங்கேற்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றது.

பிற நாடுகளில் உள்ளோரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உரிமமும் இந்தச் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர் தமிழர்கள் இலக்கு வைக்கப்படுவதையும், கண்காணிக்கப்படுவதையும் அதிகரிப்பதற்கான ஒப்புதலை வழங்குகின்றது.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட் பாரம்பரிய முகாமைத்துவத்துக்கான ஜனாதிபதி செயலணி, கிழக்கில் அரச நிதியைப் பயன்படுத்தி இராணுவம், அரச அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன அரங்கேற்றும் சிங்களமயமாக்கலின் விரிவான பின்னணியில் வைத்தே பார்க்கப்பட வேண்டும்.

தற்போது இந்தச் சிங்களமயமாக்கலானது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகக் காணப்படும் இம்மாகாணத்தில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

சிங்கள நியமனங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்செயலணி, நிச்சயமாக இத்திட்டத்தின் ஓர் தொடர்ச்சியாக, தமிழ் அல்லது முஸ்லிம் வரலாற்றுத் தளங்களின் இழப்பில், சிங்கள – பௌத்த வரலாற்று இடங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதற்காகச் செயற்படும்.

இச்செயலணி, பௌத்த பிக்கு பணமுரே திலகவன்ச தேரோ உட்பட பல பௌத்த தீவிரப்போக்குடையோரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இப்பிக்கு திருகோணமலையிலுள்ள புல்மோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சிங்களமயப்படுத்தும் முயற்சிகளுக்காக அறியப்பட்டவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இச்சமீபத்திய நடவடிக்கை, இலங்கையில் ஆளுகைக்கு உறுதுணையாக இருக்கும் சிங்கள – பௌத்த தேசியவாத நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை ஊடுருவி வரும் இனவாதத்துக்குத் தீர்வு காணத் தவறுவது, குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கோட்டாபய ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். இலங்கைக்குள் இருந்து வரக்கூடிய சீர்திருத்தங்கள் குறித்தான நம்பிக்கைகள் பயனற்றதாகவே இருப்பதால், சர்வதேசச் சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதுடன், இராணுவமயமாக்கம் அதிகரிக்கப்பட்டுக்கொண்டு வரும் இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்.

இல்லாவிடின், இலங்கையின் துயரமான கடந்த காலம் மீண்டும் வருவதைத் தவிர்க்க இயலாது” – என்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *