பணிப்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய காவல்துறை அதிகாரி கைது !

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த 27 வயதான அந்தோரா என்ற இளம் பெண், கடந்த பல ஆண்டுகளாகக் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது, பெங்களூருவில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா மூலம், ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அவர், வீட்டு வேலை என்று அந்தோராவிடம் கூறி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துவந்துள்ளனர்.

ஆனால், இங்கு வந்ததும், இந்த வீட்டில் உள்ள காவல்துறை அதிகாரி, ஒரு பெண் உட்பட மொத்தம் 4 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடும் படி அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பெண், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததுடன், தன்னை பெங்களூருக்கு திருப்பி அனுப்புமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அந்த கும்பல், இந்த பெண்ணை கடுமையாகத் தாக்கிவிட்டு, தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையிலேயே பகுதியில் உள்ள செங்கிப்பட்டி – சானூரபட்டி பகுதியில் காரில் வந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதில், படுகாயங்களுடன் விழுந்து கிடந்த அந்த பெண்ணை, அந்த பகுதியில் உள்ள மாதர் சங்கத்தினர் சேர்ந்து, அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதில், அந்த பெண் அளித்த தகவலின்படி, பெண்ணை தாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்தது தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட 4 பேர் மீது வல்லம் மகளிர் காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனைவரையும் தேடி வந்தனர்.

பின்னர், அவர்கள் பயன்படுத்தும் தொலைப்பேசியை எண்ணை வைத்து, அவர்கள் மறைந்திருந்த நடராஜபுரம் காலணி வீட்டை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த வீட்டின் உள்ளே சென்ற தனிப்படை காவல்துறை அதிகாரிகள், உள்ளே மறைந்திருந்த செந்தில்குமார், அவரது மனைவி ராஜம், பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்த வழக்கில் கைதாகியுள்ள பிரபாகரன், சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு காவல்துறையால், கைது செய்யப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *