மூன்று மாதங்களுக்கு 1043 பில்லியன் ரூபா அரச செலவீனங்களுக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு 1043 பில்லியன் ரூபா அரச செலவீனங்களுக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் 150 ஆவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவிற்கு அமைய, அமைச்சுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடங்கிய வரவு செலவுத் திட்ட சுற்றுநிரூபத்தை நிதி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான மூன்று மாத காலப்பகுதியின் அரச செலவுகளுக்காக 1043 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

செலவுகளை மட்டுப்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, நிதி ஒதுக்கீடு தொடர்பான சுற்றுநிரூபத்தின் ஊடாகக் கோரியுள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால், அரசாங்கத்தின் செலவீனங்கள் அதிகரித்துள்ளதுடன், அரசிலயமைப்பு ரீதியான வரையறைகள் காரணமாக கடன் பெறுதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.ஆர். ஆட்டிகலவின் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், எதிர்காலத்தில் அரச செலவீனங்களை முகாமைத்துவப்படுத்தும் பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்கள் தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்தி, இந்த காலப்பகுதியில் செலவீனங்களை செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய ஊழியர்களின் செலவுகள் மற்றும் புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நிதி அமைச்சின் செயலாளர், அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றுநிரூபத்தில் கூறியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1043 பில்லியன் ரூபாவில், 644.19 பில்லியன் ரூபா, அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட அன்றாட செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 546.18 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயற்பாடுகளுக்காக 486.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சிற்காக 154 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதிய திணைக்களத்திற்கு 69.8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிற்கு 107.27 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5.17 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *