குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை 30வீதமாக குறைக்கத் திட்டம்!

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் சபா அல்-காலித் அல்-சபா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், குவைத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னை குறித்து அல்சபா பேசியுள்ளார். ‘குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 48 லட்சம் பேரில், கிட்டத்தட்ட 34 லட்சம் பேர் வெளிநாட்டினர் ஆவர். இந்த ஏற்றத்தாழ்வை தீர்க்க நமக்கு எதிர்காலத்தில் சவால் உள்ளது’ என அல் சபா கூறியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தில் சுமார் 6.5 லட்சம் வெளிநாட்டினர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலும் இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். குறைவான வரி விதிப்பு காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களது வருமானத்தை தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை, குறிப்பாக திறனற்ற தொழிலாளர்களை குறைக்க சட்டம் இயற்ற எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு மாற்றாக, குவைத்தை சேர்ந்தவர்களுக்கு பணியை ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை முன்வைத்துள்ளனர்.

கொரோனா தாக்கம் மற்றும் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சமாளிக்க, வளைகுடா நாடுகள், வங்கிகள், வணிக நிறுவனங்களுக்கு பல மில்லியன் டாலரை உதவியுள்ளன. இதில் குவைத் பிராந்தியத்திற்கு மிகச்சிறிய நிதியுதவி மட்டுமே கிடைத்துள்ளது. ஏப்.1ம் தேதி துவங்கிய நிதியாண்டில், பட்ஜெட் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 % அளவுக்கு இருக்குமென குவைத்தின் தேசிய வங்கி கணித்துள்ளது. பெரும்பாலான வளைகுடா மாநிலங்கள் பொருளாதார மதிப்பீட்டில் 15 % முதல் 25 % பற்றாக்குறையுடன் இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது கடனை அதிகரித்து, இருப்பை குறைப்பதுடன், கடுமையான தேர்வுக்கு வழிவகுக்கும்.

குவைத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பதிலாக உள்நாட்டினரை மாற்றுவது ஏற்கனவே மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் குவைத்தில் பார்லி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசு பணியில் உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுவது சில வாக்காளர்களை கவர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதி கணக்கின் படி, தனியார் துறைகளில் 19 % மட்டுமே குவைத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

குவைத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்களில், சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குவைத் அதன் பொருளாதாரத்தை எண்ணெயைச் சார்ந்திருப்பதிலிருந்து விலக வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய 224 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாகவுக், தற்போதைய சூழலில் குவைத்தில் வசிக்கும் அனைவருக்கும் தாங்கள் பொறுப்பு என்றும், ஆனால் வர்த்தகம் கைவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *