தொண்டமானின் கொழும்பு இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த திகாம்பரம் மறுத்தது ஏன்?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியையில் அனுதாப உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனுக்கும், முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கும் நேரம் ஒதுக்கப்படாமை குறித்து மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆறுமுகன் தொண்டமானின் கொழும்பு இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த திகாம்பரம் மறுத்தது ஏன் என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,

“நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன்.

ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன்.

அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வரும்வரை இருந்து விட்டு வந்து விட்டேன்.அடுத்த நாள் நமது கட்சிகாரர்களுடன் அவரது இல்லத்துக்கும் சென்றேன். அதற்கடுத்த நாள் பாராளுமன்றமும் சென்றேன்.

தம்பி திகாவை தவிர தமுகூ எம்பீக்கள் யாரும் கொழும்பில் இருக்கவில்லை. “இல்லத்துக்கு போறேன். வருகிறீர்களா?” என அவரை கேட்டேன்.

அவரும் வந்து சோகத்தை தெரிவிக்கவே விரும்பினார்.

ஆனால், “இல்லை அண்ணே, முன்பு ஒருமுறை பெரியவர் தொண்டமான் மரண வீட்டுக்கு, திரு. எம். எஸ். செல்லசாமி அவர்கள் சென்ற போது கூச்சல் எழுப்பி தகராறு செய்துள்ளார்கள். ஆகவே இப்போ நான் அங்கு வந்து அப்படி ஏதும் நிகழ்ந்து மலையகத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது. இறுதி சடங்குகள் அமைதியாக நடக்கட்டுமே” என்று தயங்கினார்.

அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருந்ததால்,நான் தொடர்ந்து வலியுறுத்த வில்லை.

அடுத்த நாள் பாராளுமன்றத்துக்கு என்னுடன் திகாவும், ஏனைய தமுகூ எம்பீக்களும் வந்தார்கள்.

நோர்வூட் இறுதி நிகழ்வுக்கும் நான் போக இருந்தேன். ஆனால், எம் கட்சியின் மிக சிரேஷ்ட உறுப்பினர் நெடுஞ்செழியன் திடீரென சனியன்று மறைந்து விட்டார்.

ஞாயிறு அவரது இறுதி சடங்கு. ஆகவே நான் நோர்வூட் போகவில்லை.

தமுகூ சார்பாக பிரதி தலைவர் இராதாகிருஷ்ணனை போகும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நுவரெலியாவில் தயாராக இருந்தார்.

அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நண்பர் சுமந்திரன், தான் கூட்டமைப்பு சார்பாக போக உள்ளதாகவும், நான் போகின்றேனா என என்னிடம் தொலைபேசியில் கேட்டார்.

அவரை இராதாகிருஷ்ணனுடன் தொடர்பு படுத்தினேன்.

அப்போது சனிக்கிழமை பின்னிரவு. அப்போதும் நான் சும்மா இருக்கவில்லை. நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பகுமாரவை தொலைபேசியில் அழைத்து பேசினேன்.

“புஷ்பகுமார, நாளை ஏற்பாடுகள் எப்படி?”

“சார், நீங்கள் வருகிறீர்களா?”

“இல்லை, நான் வரவில்லை. எங்கள் கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் வருகிறார். அதேபோல் முன்னாள் எம்பி சுமந்திரனும் வருகிறார். இருவருக்கும் அஞ்சலி உரையாற்ற நேரம் ஒதுக்குங்கள். இராதாகிருஷ்ணன் உங்கள் நுவரெலியா மாவட்ட முன்னாள் எம்பி. உங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு முன்னாள் தலைவர். அதேபோல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சார்பாக முன்னாள் எம்பி சுமந்திரனும் பேசுவது நியாயம்.”

“சார், இந்நிகழ்வு முழுமையான அரச அனுசரணை நிகழ்வாக நடக்கவில்லை. செலவில் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி அரசாங்கம் கூறியுள்ளது. அஞ்சலி உரையாற்றுபவர்களின் பெயர் பட்டியலை அமைச்சர் தொண்டமானின் குடும்பம்தான் தயாரிக்கிறது.”

“அப்படியா, சரி இவர்களுக்கு சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கும்படி குடும்பத்தவர்களிடம் சொல்லுங்கள். நான் சொன்னதாகவே சொல்லுங்கள்.”

“சரி சார்,சொல்கிறேன்.”

அவர் சொன்னாரா என நான் மீண்டும் அழைத்து கேட்கவில்லை.

எப்படியும், இராதாகிருஷ்ணன் எம் சார்பில் சென்றார். சுமனும் இறுதி நிகழ்வுக்கு போனார்.

சுமனுக்கு அடுத்த நாள் காலை நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கில் அவரது வாத உரை இருந்தது. இந்நிலையிலும் வடகிழக்கு உடன்பிறப்புகளின் சோகத்தை தெரிவிக்க அவர் போனார்.

இறுதி நிகழ்வில் இந்த மலையக, ஈழ தமிழர்களுக்கு உரையாற்ற சில நிமிடங்களும் ஒதுக்கப்படவில்லை.

ஆளும் அணி சார்பில் மகிந்தானந்தவும், எதிரணி சார்பில் ரவுப் ஹக்கீமும் பேசினார்கள்.

அப்புறம் பார்த்தால்,“தோட்ட தொழிலாளி சம்பளம்” புகழ் நவீன் திசாநாயக்கவும் பேசினார். அவர் எந்த அணியின் சார்பில் பேசினார் எனக்கு தெரியவில்லை.

மாலை நடந்தவைகளை இராதா எனக்கு தொலைபேசியில் விபரித்த போது, எனக்கு திகாம்பரம் சொன்னது ஞாபகம் வந்தது. உண்மையில் அவர் நேரடியாக இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளாமை சரிதான். அங்கே வந்து இருந்தால், தேவையற்ற சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம்.

இறந்தவர் ஒரு அரசியல்வாதி என்பதால், இறப்புக்கும் முன்னிருந்த கொள்கை முரண்பாடுகளை, இறப்பின் போது, அந்த கணத்தில் ஒத்தி வைக்க வேண்டும் என்பது நான் கற்ற அரசியல் நாகரீகம்.

அதேவேளை முரண்களை மறந்து விட முடியாது. ஏனெனில் அது மக்கள் சார்ந்தது. இது நான் கற்ற அரசியல்.

ஆறுமுகனிடம் என்னை கவர்ந்தது, அவரிடம் இருந்த “நகைச்சுவை உணர்வு”.

எத்தனை பேருக்கு இது தெரியுமோ,என்னவோ! நானும், நண்பர் ரவுப் ஹக்கீமும் நன்கு அறிவோம்.

மற்றவர்களுக்கு அவர் தலைவர், தம்பி, அமைச்சர். எங்களுக்கு அவர் “தொண்டா”. அவ்வளவுதான்.

சில நாட்களுக்கு முன் கூட ஆறுமுகனின் நகைச்சுவை உணர்வைபற்றி நானும், ஹக்கீமும் சிலாகித்து பேசிக்கொண்டோம்.

எது எப்படி இருந்தாலும்கூட, நாம் இன்னமும் நாகரீகம் அடைய வேண்டும். அரசியல் நாகரீகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *