பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மற்றும் சுகாதார அமைச்சிற்கு இடையில் கலந்துரையாடல் இன்னும் இடம்பெற்றுவருவதாகவும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சின் குழு ஒன்று அண்மைய நாட்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் அதிபர்களை இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை “மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, அவர்களில் பலர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களால் பாடசாலை மற்றும் பொது பேருந்துகளில் சமூக விலகலை கடைபிடிக்க முடியாது.
சுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி, கொரோனா தாக்கம் இருந்தால் கூட அதன் ஆணிவேரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும், அதனால்தான் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக போக்குவரத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். இது ஒரு சுலபமான காரியம் அல்ல, இருப்பினும் நாங்கள் அதைச் செய்ய முயற்சிக்கிறோம்” என கூறினார்.
அத்தோடு பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நாற்காலிகள் இடையேயான தூரம், மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இருக்காது என்று அமைச்சர் டளஸ் அளகப்பெரும கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *