கொரோனா வைரஸை விடவும் அரசாங்கத்தின் தேர்தல் வைரஸ் ஆபத்தானது!

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற (03) ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தாவது,
“சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தலை சுகாதார முறையில் நடத்துவது தொடர்பில் வழிகாட்டியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தேர்தலில் வாக்காளர்களே வாக்களிக்க வேண்டும். அவர்களின் மன நிலைகளை அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும், பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளுமே நன்கறிவர். எனவேதான் கட்சிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட வேண்டும்.
கொரோனா வைரஸை விட மிகவும் மோசமாக தேர்தல் வைரஸ் உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சி ஜூன் 20ஆம் திகதி, எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டுமென வரிந்துகட்டிக்கொண்டு நின்றது. பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது. எனினும், ஆளுங்கட்சிக்காரர்களை விட ஏனைய அனைத்துக் கட்சிகளும், இது தேர்தல் காலம் அல்ல எனவும் மக்களை கொரோனா வைரஸுக்கு காவுகொடுத்து, பலிக்கடாவாக்க முடியாதெனவும் வெளிப்படையாக தெரிவித்தனர்.
ஆனால், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில், தேர்தலை வைக்குமாறு அடம்பிடித்து நின்றது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், தேர்தல் திணைக்களத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் குறிப்பாக, ரத்னஜீவன் ஹூல் ஆகியோரை கண்டபடி திட்டத் தொடங்கினர். 19 வது திருத்தத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைகுழுவின் சுயாதீனத்தன்மைக்கு வேட்டுவைக்கும் வகையில், தினமும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஊடகங்களில் கருத்துக்களைக் கொட்டினர்.

உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மனுக்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்ற விசாரணையின் ஆரம்ப நாளன்றே, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ‘ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்தமாட்டோம்’ என அறிவித்தது. இது அரசாங்கத்துக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த அரசாங்கம், தற்போதைய நிலையில் சாதாரண பெரும்பான்மையைக் கூட பெற முடியுமா? என்ற ஏக்கத்திலேயே இருக்கின்றது.
தேர்தலை நடத்துவது தொடர்பில், சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு ஒன்றும் ஊடகங்களில் வேறொன்றுமாக கருத்துத் தெரிவிப்பதை காண்கிறோம். ஆளுங்கட்சி கூட இப்போது “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற நிலைக்கே வந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மனுக்கள் நிராகரித்த அறிவிப்பை, ஏதோ தேர்தலில் வெற்றிபெற்றது போன்ற முடிவாக எடுத்துகொண்டு, பட்டாசுகளைக் கொளுத்தி வெற்றிக்களிப்பிலே கொண்டாடியதை நாம் என்னவென்றுதான் சொல்வது?” இவ்வாறு அவர் கூறினார்.      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *