98 வயது மாணவிக்கு தேசிய விருது!

‘‘அந்தப் பெண்ணைப் போல் கற்பதற்கான பசி எனக்கிருந்தால் என் மூளை சோர்ந்துபோகாமல் எப்போதும் உயிர்த் துடிப்புடன்  இயங்கிக்கொண்டே இருக்கும். இனி அவர்தான் என் ரோல் மாடல்…’’ டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருந்தார் ‘மஹிந்திரா குரூப்’  நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா. இவர் மட்டுமல்ல; திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள், ‘‘அந்தப் பெண்ணின் செயல் எல்லோருக்கும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது…’’ என்றனர். இதுவெல்லாம் நடந்தது 2018-இல். ‘சாதிப்பதற்கு வயது தடையில்லை’ என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழும் கார்த்தியாயினிதான் பிரபலங்கள் மெச்சுகின்ற அந்தப் பெண்.  96 வயதில் முதியோர் கல்வித் திட்டத்தின் கீழ் படித்து நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வு எழுதி முழுமதிப்பெண் பெற்றார்! தன் வாழ்வில் கார்த்தியாயினி எழுதிய முதல் தேர்வு இதுதான். மட்டுமல்ல, அத்தேர்வை எழுதிய 40 ஆயிரம் பேரில் அதிக வயதானவரும் இவர்தான். கார்த்தியாயினிக்கு பள்ளிக்குப் போய் பாடம் பயில வேண்டும் என்பது பெருங்கனவு. ஆனால், குடும்பச்சூழல் காரணமாக சிறு  வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. ஆறு குழந்தைகளுக்குத் தாயானார்.

இந்நிலையில் திடீரென்று  கார்த்தியாயினியின் கணவர் மரணமடைய, குடும்பத்தின் சுமையைத் தனியாளாகச் சுமந்தார். கடைசி மகள் ஒன்பதாவது படிக்கையில் வேறு வழியின்றி அவருக்குத் திருமணம் செய்து வைக்க நேர்ந்தது. என்றாலும் அந்த மகள்  வயதானபிறகு, இரு வருடங்களுக்கு முன் 10ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றார்! முதியோர் கல்வியில் சேர்ந்து யார் வேண்டுமானாலும் படிக்கலாம்; தேர்வு எழுதலாம் என்பது அப்போதுதான் கார்த்தி யாயினிக்குத் தெரிந்தது. உடனே கல்வி கற்க தன் கொள்ளுப் பேத்தியின்  வயதாகும் ஆசிரியையைத் தேடிப் போனார். கார்த்தியாயினியின் கற்கும் ஆர்வத்தைக் கண்ட அந்த ஆசிரியை வீடு தேடி வந்து பாடம் நடத்தினார். விளைவு, 4ம் வகுப்பில் வெற்றி! ‘‘உயிருடன் இருந்தால் பத்தாவது பரீட்சை எழுதி பாஸ் ஆவேன்..!’’  என்கிறார் கார்த்தியாயினி! குடும்பம் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பாக வழங்கப்படுகிறது ‘நரி சக்தி புரஸ்கார்’ விருது. தேசிய அளவில் சிறந்து விளங்கும், மற்ற பெண்களுக்கு முன்னு தாரணமாக இருக்கும் சாதனைப் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2020-இன் ‘நரி சக்தி புரஸ்கார்’ விருதைத் தட்டியிருக்கிறார் கார்த்தி யாயினி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *