புனித ஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்

உலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு 220,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவிருந்தனர்.
எனினும் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல், வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய இந்தக் கடமையை முன்னெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஜுலை இறுதியில் ஆரம்பமாகும் ஹஜ் யாத்திரை குறித்து சவூதி அரேபியா தமது முடிவை இன்னும் வெளியிடவில்லை. எனினும் உம்றா மற்றும் ஹஜ் கடமைகளை அடுத்த அறிவித்தல் வரை சவூதி அரேபியா ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியா ஹஜ் யாத்திரையில் இருந்து விலகுவதாக அந்நாட்டு சமய விவகார அமைச்சு நேற்று அறிவித்தது. “இது மிகவும் கசப்பான மற்றும் கடுமையான முடிவாக இருந்தது” என்று சமய விவகார அமைச்சர் பச்ருல் ராசி குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது பிரஜைகள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈடுபட முடியாது என்று சிங்கப்பூர் கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *