நாட்டைப் பாதுகாக்க அதிவிஷட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இரண்டு ஜனாதிபதி செயலணிகளை நியமித்துள்ளார்.

பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் 13 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதன் தலைவராக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஆகியோர் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களைத் தவிர, சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வுத் தகவல்கள் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

அத்துடன், இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். ஹேவாவிதாரண, கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கெப்டன் எஸ்.ஜே. குமார, விமானப்படையின் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் எயார் கொமாண்டர் எம்.டீ.ஜே. வாசகே, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபர் டீ.சீ.ஏ. தனபால மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் இந்த செயலணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் செயலாளர் பொறுப்பிற்கு பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டி.எம்.எஸ். திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் உரிமைக்கான முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த செயலணியில் எல்லாவல மேதானந்த தேரர், வடக்கு – கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்கள் மற்றும் தமன்காடு பிரதேசத்தின் பிரதம சங்கத் தலைவர் பனாமுரே திலகவங்ச தேரர் உட்பட 11 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த செயலணியின் தலைவராக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க, காணி ஆணையாளர் சந்திரா ஹேரத், அளவீட்டாளர் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோர் இந்த செயலணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாணத்தின் காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.பீ. திசாநாயக்க மற்றும் வர்த்தகர் திலித் ஜயவீர ஆகியோர் இந்த செயலணிக்கு பெயரிடப்பட்ட ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்த செயலணியின் செயலாளர் பொறுப்பிற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *