இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக பரவல்! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று, சமூகப் பரவலாக மிகத் தீவிரமாக பரவி இருக்கிறது; இந்தக் கட்டத்தில் நோயை ஒழிக்க முடியும் என எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று என தொற்றுநோய் இயல் நிபுணர்கள் குழு பிரதமர் மோடிக்கு அறிக்கை அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்ட இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகளை மத்திய அரசு கையிலெடுத்தது. வைரஸ் பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே, கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு 4 கட்டமாக நீட்டிக்கப்பட்டு, தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாடு மண்டலங்களில் மட்டும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. மற்ற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள், போக்குவரத்து ஆகியவை நேற்று முதல் படிப்படியாக தொடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் வைரஸ் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளது.

தற்போது கொரோனாவால் சுமார் 5,400 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டுகிறது. நேற்று வரையில் 1.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை படுஉச்சத்தை எட்டி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. உலக அளவில் மோசமாக பாதித்த நாடுகளில் இந்தியா 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனாலும் 2 மாதமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள், கொரோனாவின் சமூக பரவல் என்ற பயங்கரமான 3வது கட்டத்தையே மறந்து பொது இடங்களில் கூடத் தொடங்கி உள்ளனர்.  அதே போல, மத்தியஅரசும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலை இன்னும் எட்டவில்லை என்றே கூறி வருகிறது. பாதிப்பு 2 லட்சத்தை எட்டும் நிலையிலும் கூட, 2வது கட்டத்திலேயே வைரஸ் இருப்பதாக தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்,  தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு பிரதமர் மோடிக்கு அளித்த அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவின் 3வது கட்டமான சமூக பரவல் மிக ஆழமாக வேரூன்றி விட்டதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம், தொற்றுநோய் இயல் நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  இந்தியாவில் மிகப்பெரிய மக்கள் பிரிவில், கொரோனா வைரஸ் நோய் தொற்றின் சமூகப் பரவல் மிக ஆழமாக வேரூன்றி விட்டது. இந்த கட்டத்தில் நோயை ஒழிக்க முடியும் என எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. கடுமையான தேசிய ஊரடங்கின் மூலம் நோய் பரவல் தீவிரமடைவதன் காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைப்பு மிகச்சிறப்பாக இல்லாத நிலையிலும், திறம்பட திட்டமிட்டு, நிலைமையை சமாளிக்க முடிந்தது. இருப்பினும், 4ம் கட்ட ஊரடங்குக்குப் பிறகு பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அசாதாரண அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை வடிவமைப்பவர்கள், வெறும் புள்ளிவிவர கணிப்புகளின் அடிப்படையிலேயே கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்க ஆலோசனை வழங்கியிருக்கலாம் என தெரிகிறது. இவர்களுக்கு பதிலாக தொற்றுநோயியல் நிபுணர்களை அரசு கலந்தாலோசித்திருந்தால் இன்னும் சிறப்பாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். கொள்கை வகுப்பாளர்கள் பொது நிர்வாக அதிகாரத்துவத்தையே பெரிதும் நம்பியிருந்தனர். தொற்றுநோயியல், பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம் மற்றும் சமூக விஞ்ஞானிகள் போன்ற துறைகளில் நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஈடுபாடு குறைவாகவே இருந்துள்ளது. இதனால்தான், மனிதாபிமான நெருக்கடி மற்றும் நோய் பரவுதல் ஆகிய இரண்டிலும் இந்தியா அதிக விலை கொடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அரசு தரப்பில் சமூக பரவல் நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

  1. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படும் நிலை.
  2. இது உள்ளூர் பரவல் எனப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து நோய் தொற்றோடு வந்தவர்களோடு நெருக்கமான தொடர்பில் உள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவது.
  3. இதைத்தான் சமூக பரவல் என்கிறோம். வெளிநாட்டிற்கு செல்லாமல், நோய் தொற்றுடன் உள்ளவர்களோடு நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருக்கும் பொதுமக்கள் இடையே இந்த நோய் தொற்று அதிக அளவில் பரவும். இந்த சமூக பரவலில் யாரிடம் இருந்து யாருக்கு நோய் பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாதது.
  4. மக்கள் கொத்துக், கொத்தாய் பாதிக்கப்படும் நிலை. இது அபாயகரமான அளவில் பரவும்போது, ‘கொள்ளை நோய்’ நிலையை எட்டும் (தற்போது அமெரிக்காவில் உள்ளது போல்). இந்த நிலை வரும்போது மிக, மிக அதிக அளவில் கொடூரமான பாதிப்புகள் ஏற்படும். சாவு எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே போகும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *